Published : 01 Mar 2021 11:19 AM
Last Updated : 01 Mar 2021 11:19 AM
கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமகவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று ஸ்டாலின் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. மக்கள் நலக் கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகளான மதிமுக, விசிக, இடதுசாரிக் கட்சிகள் திமுக கூட்டணியிலும், தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியிலும் இணைந்தன. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதே கூட்டணி தற்போது தொடர உள்ள நிலையில் சட்டப்பேரவைக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் தொடங்கியுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுக மொத்தமாக 180 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு சிறு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளுக்கு 54 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக மட்டத்தில் பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில் நேற்று திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.
இதில் பேச்சுவார்த்தை முடிந்ததாகக் கூறப்படுகிறது. தொகுதிகள் எத்தனை என்பது குறித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளது. கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக திமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT