Last Updated : 01 Mar, 2021 03:16 AM

 

Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

தனிநபர் விபத்து காப்பீடுகளின் புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்

சென்னை

தனிநபர் விபத்துக் காப்பீடுகளின் விதிமுறைகளை எளிதாகவும், அனைவருக்கும் புரியும் வகையிலும் மாற்றி அமைக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

விபத்துக்களில் காயமடையும், உயிரிழக்கும் பாலிஸிதாரர்களுக்கு உதவுவதற்காக, காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமான விபத்துக் காப்பீடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த விபத்துக் காப்பீடுகளை தனி நபர்கள்ஆராய்ந்து தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்வது கடினமான விஷயமாக உள்ளது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) தனிநபர் விபத்துக் காப்பீட்டு விதிமுறைகளை எளிதாகவும், அனைவருக்கும் புரியும் வகையிலும் மாற்றி அமைக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு மாற்றிஅமைக்கப்படும் புதிய பாலிஸியில் சேர்க்கப்படும் புதிய விதிகளையும் ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.

இதன்படி, விபத்துக் காப்பீடு எடுத்த ஒரு ஆண்டுக்குள் காப்பீட்டுதாரர் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்த ஊனம் ஏற்பட்டாலோ காப்பீட்டுத் தொகை நூறு சதவீதம் வழங்க வேண்டும். விபத்தில் காப்பீட்டுதாரருக்கு ஒரு கை அல்லது ஒரு கால் என உடலில் ஏதாவது ஒரு பாகத்தை இழந்து விட்டால், அவருக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும்.

விபத்து காரணமாக, மருத்துவமனையில் காப்பீடுதாரர் அனுமதிக்கப்பட்டால், காப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் இழப்பீடாக வழங்க வேண்டும். விபத்துக் காப்பீடு ஒரு வருட காலம் அமலில் இருக்க வேண்டும். அத்துடன், எளிதாக புதுப்பிக்கும் வகையிலும் இருத்தல் வேண்டும். விபத்துக் காப்பீடுகள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ.2.5 லட்சமாகவும், அதிகபட்சமாக ரூ.1 கோடிக்குமிகாமலும் இருக்க வேண்டும்.

நிரந்தர ஊனம் காரணமாக காப்பீடுதாரர் வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்கு முழு காப்பீட்டுத் தொகையையும் இழப்பீடாக வழங்க வேண்டும். இத்தகைய புதிய விதிகள் கொண்ட இந்த விபத்துக் காப்பீடு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம், தனிநபர்கள் தங்களுக்குத் தேவையான விபத்துக் காப்பீட்டை எளிதாக தேர்வு செய்ய முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x