Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

இரட்டை இன்ஜின் வாகனத்தால் மக்களுக்கு பயனில்லை: மத்திய, மாநில அரசுகள் மீது பிருந்தா காரத் விமர்சனம்

திருநெல்வேலி

“இரட்டை இன்ஜின்களாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் விமர்சித்தார்.

பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கரோனா காலத்தில் 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகளை வாரிவழங்கி வருகிறது. கடந்த ஓராண்டில் 3 பெரும் பணக்காரர்கள் மட்டும் ரூ.40 லட்சம் கோடி அளவுக்கு ஆதாயம் அடைந்துள்ளனர். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. ஊரக வேலை உறுதி திட்ட நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டது.

அதிமுக அரசு 100 நாட்களுக்கு பதில் வெறும் 45 நாட்களுக்கே வேலை வழங்குகிறது. நாட்டில் பல்வேறு இடங்களில் ஊரக வேலை உறுதி திட்ட பணியாட்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.256 வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ.191 மட்டுமே வழங்கப்படுகிறது. அதையும் கடந்த 6 மாதமாக சரியாக வழங்கவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நாடு முழுக்க வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் நிலையில், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக என்று இரட்டை இன்ஜின் மூலம் இயக்கப்படும் வாகனம் சரியான பாதையில் செல்லாது. இதனால் மக்களுக்கு பயன் இருக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x