Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுப்புற 14 கிராமங்களில் சில பகுதிகளுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை: பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை

கல்பாக்கம்

கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுவட்டார 14 கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர் காலங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி மற்றும் பாபா அணு ஆராயச்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலா கமிட்டியின் உறுப்பினர் செயலராக திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா செயல்படுகிறார்.

5 கி.மீ. சுற்றளவு

அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவுக்குள் வரும் பகுதிகள் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம் ஆகிய கிராமங்கள் 5 கி.மீ. சுற்றளவுக்குள் வருகின்றன. இப்பகுதிகளில் பேரிடர் மற்றும் அவசர காலங்களின்போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்துக்குள்ளாகும் என்பதால் இந்த கிராம பகுதிகளில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டி உறுப்பினர் செயலரின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான சர்வே எண் விவரங்களுடன் மாவட்ட பதிவாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், பத்திரப் பதிவுகளை நிறுத்தவும் இது தொடர்பான அரசாணை நகலை திருக்கழுக்குன்றத்தை சுற்றியுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களின் தகவல் பலகையில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு

இந்நிலையில், "சுற்றுப்புற கிராம மக்களின் கருத்துகளை கேட்காமல் மேற்கண்ட நடவடிக்கைகளை நிலா கமிட்டி மேற்கொண்டுள்ளது. இதை ஏற்க முடியாது. இந்த அறிவிப்பை திரும்பப் பெறவில்லையென்றால், வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்போம்" என புதுப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x