Published : 28 Feb 2021 03:16 PM
Last Updated : 28 Feb 2021 03:16 PM
கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கணைய அழற்சியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு ஊசி மூலம் வலி நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கார்த்திகா (27) என்ற பெண், கணைய அழற்சி பிரச்சினையால் கோவை அரசு மருத்துவனையில் 2 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில், நோயின் தீவிரம் காரணமாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்கவியல் துறையின் வலி நீக்க மையத்துக்குப் பரிந்துரைத்தனர்.
அங்கு மயக்கவியல் துறைத் தலைவர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் நர்மதா யாங்சே ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல் முறையாக வலி தீர்வு செயல்முறையை (Celiac plexus neurolysis)வெற்றிகரமாக கடந்த 20-ம் தேதி செய்தனர். இதையடுத்து, அந்தப் பெண் சிகிச்சை முடிந்து வலியில்லாமல் வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர்கள் கல்யாணசுந்தரம், நர்மதா யாங்சே ஆகியோர் கூறியதாவது:
''கணைய அழற்சியால் கணையம் வீங்கி அந்தப் பெண் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரின் நோயைச் சரிசெய்ய முடியாவிட்டாலும், வாழும் காலத்தில் வலியால் அவதிப்படாமல் இயல்பாக வாழுமாறு செய்ய முடியும். இதற்காக, கணையம், வயிறு ஆகிய இடங்களுக்குச் செல்லும் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்தி மரத்துப்போகச் செய்துள்ளோம். இதன் மூலம் 6 மாதங்கள் முதல் ஓராண்டுவரை வலி இருக்காது. வேறு எந்த உறுப்பும் பாதிக்காத வகையில் மிகவும் கவனத்துடன் ஊசி செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதிக வலி இருந்தால் மீண்டும் ஒரு ஊசி செலுத்தப்படும்.
கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயிற்று புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கும் இதேபோன்று தீர்வு அளிக்க முடியும்''.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT