Published : 28 Feb 2021 01:30 PM
Last Updated : 28 Feb 2021 01:30 PM
மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் எந்தவிதமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்காமல் தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பரப்பும் ஆயுதமாக தேசிய கல்விக்கொள்கையைப் பயன்படுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்துள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களிடம் உரையாற்றி, குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் நெல்லைக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற நாசரேத் தேவாலயத்தில் வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்லூரிப் பேராசிரியர்களுடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நம்முடைய கல்வி முறை என்பது நமது ஆசிரியர்களால், நமது மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. கல்வி முறையில் ஏதாவது ஒரு கொள்கையைச் சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக மாணவர்களிடமும், ஆசிரியர்கள், பேராசிரியர்களிடமும் ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டமாக, தேசிய கல்விக்கொள்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளைக் கேட்காமல் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதிய கல்விக்கொள்கையில் இருக்கும் சாதகமான அம்சங்கள், காரணங்களோடு நெகிழ்வுத் தன்மையோடு இருந்தால், ஏற்கலாம். ஆனால், தேசிய கல்விகொள்கையை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சமூகத்தில் பரப்ப ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அதாவது தேசிய கல்விக்கொள்கையில் அதிகமான அதிகாரம் குவிந்து இருக்கிறது. இது நிச்சயம் கல்வி முறையைச் சேதப்படுத்தும்.
கல்வி என்பது வலிமையான பணக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, கல்விக்கான உதவித்தொகை திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பேசும்போதோ, எழுதும்போதோ, விவாதத்திலோ மதத்தைத் தேவையின்றி நீக்குவதை நீங்கள் விரும்பவில்லை. மதம் ஒரு பகுதியாகவே இருக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். சிந்தனைகள் எந்தவிதமான வெறுப்புணர்வு இல்லாமல் போட்டியிடும்போது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பிரச்சினை எப்போது வருகிறது என்றால், ஒருவரிடம் சென்று, நீ குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர். ஆதலால், நீ பேசக்கூடாது என்று மற்றொருவரிடம் நீங்கள் சொல்லும்போது பிரச்சினை உருவாகிறது.
இந்தத்துவாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சிலரை மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் வெளிப்படுத்தும் ஏராளமான சிந்தனைகளில் இந்துத்துவா என்பதே இல்லை. மற்றவர்களை அவமானப்படுத்துவதும், கொலை செய்வதுமாக இருக்கிறது''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT