Published : 28 Feb 2021 01:13 PM
Last Updated : 28 Feb 2021 01:13 PM
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதனை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவை திமுக அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.
மதிமுக பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள 4 பேர்:
1. மல்லை சி.ஏ. சத்யா
(மதிமுக துணைப் பொதுச்செயலாளர்)
2. மு.செந்திலதிபன்
( மதிமுக ஆய்வு மையச் செயலாளர்)
3. வழக்குரைஞர் கு.சின்னப்பா
(மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர்)
4. ஆவடி அந்திரிதாஸ்
(மதிமுக தேர்தல் பணிச் செயலாளர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT