Published : 28 Feb 2021 11:56 AM
Last Updated : 28 Feb 2021 11:56 AM

மூன்றாவது முறையாக கொளத்தூரில் ஸ்டாலின் போட்டி: ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்ப மனு அளித்தார்

சென்னை

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட ஸ்டாலின் விருப்பம் தெரிவித்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இன்று விருப்ப மனு அளித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் பிப்ரவரி 17 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த 15-ம் தேதி அறிவித்திருந்தார். ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ரூ.25 ஆயிரம் கட்டணத்துடன் விருப்ப மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

தனித் தொகுதிகளுக்கும், பெண்களுக்கும் ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிப்ரவரி 17-ம் தேதியிலிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. முதல் நாளிலேயே 1,000-க்கும் அதிகமான திமுகவினர் ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றனர். அதில் 100 பேர் விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் அலுவலக நிர்வாகிகளிடம் அளித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் போட்டியிடவும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவும் வலியுறுத்தி 100க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளதாக திமுக அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விருப்ப மனுக்கள் பெறுதல் தொடங்கியதையொட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில் இன்று கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஸ்டாலின் இன்று விருப்ப மனு அளித்தார்.

1984ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட்டு வருகிறார். 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டு வென்றார். கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அத்தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x