Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கு ரூ.21,173 கோடி கூடுதல்செலவினங்களுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் வரும் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 23-ம்தேதி தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, அலுவல்ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 25-ம் தேதி முதல் நேற்று வரை இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இறுதி துணை மதிப்பீடு
விவாதத்தின் இறுதி நாளானநேற்று, கடந்த 2020-21 நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை பேரவையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று மற்றும் இதர அவசர தேவைகள் காரணமாக அரசு கணக்கில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் சார்ந்தவை இறுதி துணை மதிப்பீடுகளில் அடங்கும்.
ஜனநாயக மரபுகள்
ஜனநாயக மரபுகள் கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், வழக்கமான சில முக்கிய செலவினங்களின் வகைகளை குறிப்பிடுவது உகந்ததாக இருக்காது.
கூடுதல் செலவினங்களின் அனைத்து இனங்களுக்கும் அரசுஆணைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. அல்லது அவைசெயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான கூடுதல் செலவினங்கள்தான் என்று உறுதியளிக்கிறேன். இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ, செலவினங்களுக்கான புதிய இனங்களோ சேர்க்கப்படவில்லை.
தேர்தலுக்கு ரூ.103 கோடி
சட்டப்பேரவை தேர்தலை நடத்த ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இதில், பொதுத் துறை மானிய கோரிக்கையின் கீழ் ரூ.102.38 கோடி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் மறு நிதி ஒதுக்கம் மூலம் செலவிடப்படும்.
இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கின்றன. இதில் வருவாய் கணக்கில் ரூ.17,790.85 கோடியும், மூலதனம், கடன் கணக்கில் ரூ.3,381.97 கோடியும் அடங்கும்.
இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த இறுதி துணை மதிப்பீடுகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT