Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
“நம்ம மாவட்டத்திலே என்ன இருக்கு! பெருசா ஒரு வளர்ச்சியும் இல்லை; வருமானமும் இல்லை” இந்த வார்த்தைகளை நம்மில் பலர் பல தருணங்களில் சலிப்போடு சொல்லியிருப்போம்.
இயற்கையில் சீரான வளங்களைத் தன்னகத்தே கொண்ட தனித்துவமான மாவட்டம் நமது விழுப்புரம் மாவட்டம்.
ஆனாலும், சலிக்கும் படியாகவே இருக்கிறது நடப்பு நிகழ்வுகள்.
அதற்கு மத்தியிலும், நமது விழுப்புரம் மாவட்டத்தில் சில முக்கிய வேளாண் சாகுபடி முக்கிய இடத்தை வகித்து வருகிறது. அவற்றில் ஒன்று சவுக்குத் தோப்பு அமைப்பது.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பெரிய அளவில் இடங்களை வாங்கிப் போட்டு, சவுக்கு நட்டு, பணம் பார்க்கும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல், கரும்பு, மணிலாவிற்கு அடுத்தபடியாக நமது மாவட்டத்தில் சவுக்கு பயிரிடப்படுகிறது.
குறிப்பாக விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் சுற்று வட்டார கிராமங்களில் இதை அதிகம் பார்க்கலாம். போதிய மழை இல்லாவிட்டாலும் தாங்கும் திறன், பெரிய அளவிற்கு பராமரிப்பு இல்லாமலேயே வளர்ந்து விடும் தன்மை ஆகியவற்றால் கடந்த 20 ஆண்டுகளில் சவுக்குச் சாகுபடியை நோக்கி அதிகமானோர் நகர்ந்திருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சவுக்குச் சாகுபடி நடக்கிறது.
விளை நிலங்களுக்கு வரும் வியாபாரிகள், மொத்தமாக விலை பேசி, சவுக்கு மரத்தை வெட்டி, சவுக்கு கம்பங்கள், வேர் கட்டைகள், சவுக்கு மிளார்கள் என தனித்தனியாக பிரித்து கோவை, ஈரோடு, பவானி, திருச்சியில் இருக்கும் தனியார் தொழிற்கூடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தொடக்கத்தில் டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் முதல், 6 ஆயிரம் வரை சவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கால், சவுக்கு விலை சரிந்து, இதை சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சவுக்கு சாகுபடியாளர்கள் அண்மைகாலமாக வைக்கும் ஒரு கோரிக்கை... ‘விழுப்புரம் மாவட்டத்தில், காகித தொழிற்சாலைக்கான சவுக்கு மரக் கூழ் உற்பத்திக் கூடத்தை அமைக்க வேண்டும்’ என்பது.
விழுப்புரம் மாவட்டத்தில் விளையும் சவுக்கு மரங்கள், காகிதக் கூழ் தயாரிக்க தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தால் (டி.என்.பி.எல்) வாங்கப்படுகிறது.
தற்போதைய சந்தை மதிப்பின் படி டிஎன்பிஎல் நிறுவனம் ஒரு டன் தோல் உறித்த சவுக்கு கட்டைக்கு ரூ.5,575 என விலை நிர்ணயம் செய்துள்ளது.
அதே போல் தனியார் மூலம் வாங்கப்படும் ஒரு டன் சவுக்கு ரூ.3,750 க்கு (தோல் உறிக்காத சவுக்கு கட்டைகள்) என நிர்ணயம் செய்துள்ளனர்.
இதில் அரசு நிர்ணயித்த விலை கூடுதலாக இருந்தாலும், போக்குவரத்து செலவீனம், சவுக்கு தோல் உறிப்புச் செலவு என டன் ஒன்றுக்கு ரூ. 700 வரை சாகுபடியாளர்களுக்கு கூடுதல் செலவு வைக்கிறது. மேலும், சப்ளை செய்த சவுக்குக்கு பணம் வர ஏறக்குறைய 4 மாதங்கள் ஆகின்றன.
இந்தச் சூழலில் விழுப்புரம் மாவட்டத்தில், அதிக அளவில் சாகுபடியாகும் சவுக்கு மரங்களைக் கருத்தில் கொண்டு, இங்கேயே அரசு சார்பில் காகித கூழ் தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என்று சாகுபடியாளர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக மயிலம் தொகுதி எம்எல்ஏ மாசிலாமணி சட்டமன்றத்தில் பேசிய போது, '' வெண்மணியாத்துார் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை தொடங்க உள்ள இடத்தில், காகித தொழிற்சாலைக்கு தேவையான சவுக்கு மரத்தில் தயாரிக்கும் காகித கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது போல், சவுக்கு பயிரிடும் விவசாயிகளுக்காக சவுக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்'' என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை திண்டிவனம் அருகே தீவனூரில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மயிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சவுக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை, இங்கிருந்து ஆந்திராவுக்கு கொண்டு சென்றால் டன் ஒன்றுக்கு ரூ.2,500 லோடு செலவாகிறது, கரூருக்கு சென்றால் ரூ.1,200 செலவாகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் காகித தொழிற்சாலைக்கான சவுக்கு கூழ் உற்பத்திக் கூடத்தை அமைக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் கடவம்பாக்கம் மணியிடம் கேட்டபோது, “திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தென்னாற்காடு மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கட்டிடத்தில் காகித கூழ் தொழிற்கூடம் அமைக்கலாம் என்று தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. போதுமான தண்ணீர் வசதி இல்லை என்றும், அதனால் காகித தொழிற்சாலை அமைக்க சாத்தியம் இல்லை என்றும் தமிழ்நாடு காகித நிறுவன அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்” என்கிறார்.
தொடர்ச்சியாக வரும் இந்த கோரிக்கைகள் குறித்து, ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “சவுக்கு பயிரிடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காகித கூழ் தொழிற்கூடம் அமைக்கலாம். தேவையான சவுக்கு உற்பத்தியாகிறது என்ற புள்ளி விவரத்தோடு, தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.
உரிய நீர் வசதி உள்ள இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து பரிந்துரைக்கும். நமது மாவட்டத்தில் சவுக்கு கூழ் காகித உற்பத்திக் கூடம் விரைவில் அமையும் என்று நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT