Last Updated : 28 Feb, 2021 03:19 AM

 

Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

என்எல்சியில் நடந்து முடிந்த வாக்கெடுப்பு ரத்தாகுமா..?

என்எல்சி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய, வாக்களிக்க வரிசையில் காத்திருந்த தொழிலாளர்கள்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர்களுக்கான உரிமைகளைப் பெற நிர்வாகத்துடன் அங்கீரிக் கப்பட்ட தொழிற்சங்கத்தினர் மட்டுமே பேச்சு நடத்த முடியும்.

அச்சங்கத்தை தேர்ந்தெடுக்கும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான வாக்கெடுப்புத் தேர்தல் கடந்த 25-ம் தேதி நடந்து முடிந்து விட்டது. ஆனால், பதிவான வாக்குகளை எண்ண சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.

இதனால் நடந்து முடிந்த வாக்குப்பதிவு ரத்தாகும் என ஒரு சாரர் கூறி வருகின்றனர்.

என்எல்சி நிறுவனத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் பங்கேற்ககடந்த 3-ம் தேதி மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் 13 தொழிற்சங் கங்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களிடம் தேர்தல் தொடர்பாக ஆலோசித்ததோடு, புதிதாக திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கம் தேர்தலில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆலோசனைக் கேட்டுள்ளார்.

அந்த ஆலோசனைக்குப் பின், ‘ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து ஓராண்டுக்கு மேலானால் மட்டுமே போட்டியிட முடியும்’ என முடிவு செய்யப்பட்டது. இதனால் திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கம் தேர்தலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து தேர்தலில் சிஐடியு, எம்எம்எஸ், கனரக தொழிற்பிரிவு அண்ணா தொழிற்சங்கம், என்எல்சி மஸ்தூர் சங்கம், என்எல்சி பாட்டாளித் தொழிற்சங்கம், அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி, என்எல்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்டவை தேர்தலில் போட்டியிடும் சங்கங்களாக மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவித்தார்.

இந்தத் தொழிற்சங்கங்கள் தேர்தலை எதிர் கொண்டன.

இதனிடையே திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் நிர்வாகியான கோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கள் சங்கத்தையும் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு கடந்த 25-ம் தேதி விசாரணக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் தேர்தலை ஒத்திவைக்க யோசனை தெரிவித்த போது, 50 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டதால், தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என தொழிலாளர் நல ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது. இதன் பேரில், ‘தேர்தல் நடக்கட்டும், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டாம்’ என உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குத் தொடுத்த கோபாலிடம் பேசிய போது, “சங்கம் பதிவு செய்திருந்தாலே போதும் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. எங்களைப் போட்டியில் பங்கேற்க விடக் கூடாது என்பதற்காகவே புதுப்புது விதிமுறைகளை வகுத்தனர். அதை எதிர்த்து தான் நீதிமன்றம் சென்றோம்.

மேலும், மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகம் கடந்த 3-ம் தேதி அறிவித்த பதிவு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்கங்களில் பட்டியலில் 13 தொழிற்சங்கங்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் என்எல்சி நிறுவனத்தில் இல்லாத கனரக தொழிற்பிரிவு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய சங்கங்கள் தேர்தலில் பங்கேற்கச் செய்தது எப்படி என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளோம்.

மேற்கண்ட இரு அமைப்புகளில், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் பேரவையாக கனரக தொழிற்பிரிவு அண்ணா தொழிற்சங்கம் செயல்படுகிறது.

தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் பேரவையாக அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி செயல்படுகிறது. இந்த இரு அமைப்புகளும் பதிவு புதுப்பிக்காத நிலையில் அவர்கள், ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்க தகுதியை இழந்துள்ளனர்” என்று கூறுகிறார்.

இதுகுறித்து என்எல்சி கனரக தொழிற்பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர் வெற்றிவேலுவிடம் கேட்டபோது, “எங்களது அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் கனகர தொழிற்பிரிவு அண்ணா தொழிற்சங்கப் பேரவையுடன் இணைக்கப்பட்டது. ஆண்டு தணிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக சங்கம் இணைக்கப்பட்டது. தற்போது தொழிலாளர் நல முதன்மை துணை ஆணையர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கனரக தொழிற்சங்க பிரிவு அண்ணா தொழிற்சங்கம் என்ற பெயரில் போட்டியிட்டோம். சங்கப் புதுப்பித்தல் இல்லை என்று கூறுவது தவறு. தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்திற்கு தனி செல்வாக்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த சிலர் காழ்ப்புணர்ச்சியின் பேரில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் தவறு” என்றார்.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் முத்துமாணிக்கத்தை தொடர்பு கொண்டோம். இதுபற்றி தன்னால், எதுவும் பேச இயலாது என தெரிவித்தார்.

தொழிலாளர்களின் பிரச்சினை களைத் தீர்க்க முன்வரும், தொழிற் சங்கங்களிடையேயான பிரச்சினைகள் இப்படியாக இருப்பதால் என்எல்சியில் வாக்கெடுப்பு நடந்தும், முடிவை அறிவிப் பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x