Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்- தேர்தல் சாதனையாளர்கள் ஒரு பிளாஷ்பேக்

திண்டுக்க

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் 6 பேர் ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்களாகி ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்துள்ளனர். இதில் காங்கிரசை சேர்ந்த இருவர், திமுகவைச் சேர்ந்த இருவர், அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழநி, நத்தம். நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகளிலும் 1977 முதல் தொகுதியின் பெயர்கள்கூட மாறாத நிலையில் தொடர்ந்து தேர்தல்கள் நடந்துவருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்துள்ளனர் காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள்.

ஏ.ஆண்டி அம்பலம், (காங்கிரஸ், நத்தம் சட்டசபை தொகுதி):

நத்தம் சட்டசபை தொகு தியில் 1977-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் மறைந்த ஏ.ஆண்டி அம்பலம். இங்கு முதல் வெற்றியை பதிவு செய்தவர். இறக்கும் வரை இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஆறு முறை தேர்வு செய்யப்பட்டு மக்களின் செல்வாக்குடன் வலம் வந்தார். 1977-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அடுத்து வந்த 1980, 1984 ஆகிய தேர்தல்களிலும் வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார். இதோடு இவர் ஓய்ந்து விடவில்லை. அடுத்தடுத்து நடந்த 1989, 1991, 1996 தேர்தல்களிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தார்.

ஏ.எஸ்.பொன்னம்மாள், (காங்கிரஸ், நிலக்கோட்டை தொகுதி)

நிலக் கோட்டை தொகுதியில் 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மறைந்த ஏ.எஸ்.பொன்னம்மாள். இத்தேர்தலைத் தொடர்ந்து நடந்த 1991, 1996-ம் ஆண்டு தேர்தல்களிலும் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றியால் ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தார்.

நத்தம் ஆர்.விசுவநாதன், (அதிமுக, நத்தம் தொகுதி):

நத்தம் தொகு தியில் தொடர்ந்து இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்த ஆண்டி அம்பலம் இறப்பிற்கு பிறகு 1999-ம் ஆண்டு நத்தம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் ஆர்.விசுவநாதன் முதன்முறையாக வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த 2001, 2006 தேர்தல்களில் வெற்றிபெற்று ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார். இதையடுத்து 2011 தேர்தலிலும் நத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் நத்தம் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஐ.பெரியசாமி, (திமுக, ஆத்தூர் தொகுதி):

ஆத்தூர் சட்டசபை தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டு தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு வென்றார். 1991 தேர்தலில் தோல்வியடைந்தார். தொடர்ந்து 1996-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். இதையடுத்து நடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தோல்வி யடைந்தார்.

2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து நடந்த 2011, 2016 ஆகிய தேர்தல்களிலும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தார்.

அர.சக்கரபாணி, (திமுக, ஒட்டன்சத்திரம் தொகுதி):

கடந்த 1996 தேர்தலில் முதன் முறையாக திமுக சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் களம் இறங் கினார். இவரை எதிர்த்து தொடர்ந்து அதிமுக வேட்பாளர்களே களம் இறக்கப்பட்டனர். நேரடி போட்டி இருந்தபோதும் இதுவரை இவரை வெற்றி காணமுடியவில்லை. 1996, 2001, 2006 என மூன்று தேர்தல்களில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார். இதையடுத்து நடந்த 2011, 2016 தேர்தல்களிலும் இவர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடைபெற உள்ள தேர்தலிலும் இவர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்த முறையும் இவர் வெற்றிபெற்றால், இரண்டாவது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை புரிவார். நத்தம் தொகுதியில் சாதனை படைத்த மறைந்த ஏ.ஆண்டி அம்பலத்தின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு இவருக்கு உள்ளது.

கே.பாலபாரதி, (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திண்டுக்கல் தொகுதி):

திண்டுக்கல் சட்டபை தொகுதியில் 2001-ம் ஆண்டு தேர்தலில் போட்டி யிட முதன் முறையாக களம் இறங்கியவர் பாலபாரதி. இதில் முதல் வெற்றியை பதிவு செய்தார். இதையடுத்து நடந்த 2006-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்று தேர்தல்களிலம் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப்படி மூன்று முறைக்கு மேல் போட்டியிட கட்சித்தலைமை இவருக்குவாய்ப்பு தரவில்லை. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட ஐந்து பேர் ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்து தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளனர். இதில் திமுகவை சேர்ந்த ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடர்ந்து தற்போதும் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x