Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம் என்று 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கம்பம் தொகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாக அமைந்திருக்கிறது.
இருபக்கமும் மலைகள் இயற்கை அரணாக அமைந்து இப்பகுதி பள்ளமாக உள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இதனால் விசேஷ பருவநிலையைக் கொண்டுள்ளது. திராட்சை, வாழை என ஆண்டு முழுவதும் விளையக்கூடிய பயிர்கள் இங்குள்ளன. அருகிலேயே முல்லைப் பெரியாறு உள்ளதால் நெல், கரும்பு, வாழை, தக்காளி, பீட்ரூட், பீன்ஸ், அவரை, வெங்காயம் உள்ளிட்ட விவசாயமும் நடைபெற்று வருகிறது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் தென்காளகஸ்தி என்று அழைக்கப்படுகிறது. இது சிறந்த ஆன்மீக தலமாக உள்ளது. இத்தொகுதியில் உத்தமபாளையம்தாலுகாவில் (பகுதி), தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம் இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக் கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இதேபோல் தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, ஓடைப்பட்டி பேரூராட்சிகளும், கம்பம், சின்னமனூர் நகராட்சிகளும் அடங்கி யுள்ளன. முக்குலத்தோர், கவுண்டர், தாழ்த்தப்பட்டோர், இஸ்லாமியர்கள், நாடார், நாயுடு உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
தீராத கோரிக்கைகள்
தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் சாக்கலூத்து மெட்டுச்சாலை திட்டம், திண்டுக்கல்-லோயர்கேம்ப் ரயில்சேவை திட்டம், திராட்சை பதனிடும் தொழிற்சாலை, நெல்கொள்முதல் நிலையங்கள், 18-ம் கால்வாயில் நீர்திறப்பை 120 நாட்களாக அதிகரித்தல் ஆகியவை பல ஆண்டு கோரிக்கைகளாக உள்ளன.
தேர்தல் வரலாறு
கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் நீதிக்கட்சி 1, காங்கிரஸ் 2, திமுக 4, அதிமுக 4, மதிமுக 1, தமாகா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது அதிமுக.வேட்பாளர் எஸ்டிகே.ஜக்கையன் எம்எல்ஏ.வாக உள்ளார். இரு அணிகளுமே தங்களுக்கு வெற்றி வாய்ப்பு வலுவாக இருக்கும் என்று வெவ்வேறு விதங்களில் மதிப்பீடு செய்துள்ளனர். திமுகவைப் பொறுத்தளவில் சிறுபான்மையினர், அதிமுகவிற்கு எதிர்மன நிலையில் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசின் பல்வேறு திட்டங்களில் மாற்றுக் கருத்து உடையவர்கள் உள்ளிட்டவர்களின் ஓட்டுக்களுடன் ஏற்கெனவே நிலையாக இருக்கும் திமுக வாக்குகளையும் பெற்றால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்று கணித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளையும் பக்கபலமாக நம்புகிறது.
அதிமுக அணியைப் பொறுத்தளவில் ஏற்கனவே செய்த நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள், சமுதாய ஓட்டுக்கள், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகள், இரட்டைஇலைக்கான நிரந்தர வாக்குகள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு வெற்றி எளிதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.
இதனால் கூட்டணி தலைமைக்கட்சி மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளும் இத்தொகுதியை கேட்டுப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கான விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்துள்ளன. அதிமுக அணியில் பாஜக நிர்வாகிகள் இங்கு போட்டியிட விரும்புகின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கம்பம் ஊராட்சி ஒன்றியத் தலைமையை பாஜக கைப்பற்றிள்ளது. இப்பகுதியில் பாஜகவை வலுப்படுத்த இது நல்ல வாய்ப்பு என கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கம்பம் தொகுதிக்கு முனைப்பு காட்டி வருகிறது. அக்கட்சிக் கூட்டங்களில் இக்கருத்தை வலியுறுத்தி பலரும் பேசி வருகின்றனர். வெற்றிக்கான தொகுதி என்று குறிப்பிட்டு திமுக கூட்டணியில் கண்டிப்பாக கேட்டுப்பெற வேண்டிய தொகுதி என்றும் தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே நேரடியாக போட்டி போடுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கண்ணோட்டத்தை விட இத்தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா, தலைமைக்கட்சியே நேரடியாக களம் காணுமா என்ற போட்டி அதிகம் உள்ளது. இதற்காக சென்னையில் முகாமிட்டும், கட்சி தலைமை நிர்வாகிகளுடனான அனறாடத் தொடர்புகளிலும் நிர்வாகிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குள் வெவ்வேறு மாற்றுக் கருத்துகள் ஏற்படுவது இயல்புதான். வெற்றிதான் மிக முக்கியம். எனவே கட்சித் தலைமையின் அறிவிப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்து களப்பணி ஆற்றுவோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT