Last Updated : 28 Feb, 2021 03:19 AM

 

Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

தேர்தல் வந்தாச்சு… தேடிவரும் வேட்பாளர்கள்: வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சியினர்

பெரியகுளம்

தேர்தல் வந்துவி்ட்டால் அரசியல்வாதிகள் பொதுமக்களை அடிக்கடி சந்திப்பதும், கனிவாக கவனிப்பதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ இதற்கு விதிவிலக்கல்ல. பிரச்சார களப்பணிதான் வெற்றியை குறிவைத்து நடத்தப்படும் உத்வேக செயல்பாடு என்பதால் தேர்தல் களம் வீரியம் நிறைந்ததாகவே இருந்து வரு கிறது.

வாக்குகளே இதற்கு அடித்தளம் என்பதால் அதை நோக்கியதான நகர்வு கள் ஏராளமாக இருக்கும்..நேரிடையாக வாக்குகள் மட்டும் கேட்டு பிரச்சாரம் செய்தது அந்தக்காலம். இன்றைக்கு பல நவீன உக்திகளையும், வியூகங்களையும் கட்சியினர் செய்ய வேண்டியுள்ளது.

வாக்காளர்களின் மனதை மாற்றுதல், தனி மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்தல், பல திட்டங்களுக்கான வாக்குறுதி அளித்தல், மாற்றுக் கட்சியினரின் பிம்பத்தை உடைத்தல், அவர்களின் குறைகளை பகிரங்கப்படுத்துதல் என்று விரிந்து பரந்த களப்பணியாக மாறிக் கிடக்கிறது. இதற்காக அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் வழிமுறைகளும், செயல்பாடுகளும் மக்களுக்கும் தெரியாதது அல்ல. அவர்களும் முடிந்த அளவுக்கு தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் மனோநிலைக்குச் சென்று விட்டனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக தற்போது கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங் களாகவே விஐபி அரசியல்வாதிகளின் நிகழ்ச்சியும், பரப்புரையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திமுக.வைப் பொறுத்தளவில் கடந்த ஜன.20-ம் தேதி தேனி அரண்மனைப் புதூரில் மக்கள் கிராமசபைக் கூட்டமும் கடந்த 18-ம் தேதி உத்தமபாளையம் பகுதியில் பிரச்சாரமும் நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் கருத்துகள், குறைகள் குறித்து ஸ்டாலினிடம்பேசினர்.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆண்டிபட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தபோது கன்னியப்பிள்ளைபட்டியில் சிறுவர்கள் அவரிடம் கிரிக்கெட் பேட் கேட்டனர். மாலையில் அவர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பேட் வழங்கப்பட்டது. அதிமுகவைப் பொறுத்தளவில் ஆட்சிக்காலத்தில் பல திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நிறைவேற்றாத, நீண்டநாள் கோரிக்கைகள் குறித்த பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட் டுள்ளன.

உதாரணமாக ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதி கண்மாய்களுக்கு குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தைக் கூறலாம். பல ஆண்டுகளாகவே இப்பகுதி விவசாயிகள் இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான ஆய்வுகளை அவர்களே சொந்தமாக செய்தனர். இதற்கான ஆய்வு அறிக்கை, திட்ட மதிப்பீடு உள்ளிட்டவற்றை சொந்த செலவிலே செய்து அதிகாரிகளிடம் அளித்தனர். ஆனால் அலைக்கழிப்பே மிஞ்சியது.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதேபோல் தேவாரம் அருகே சாக்கலூத்துமெட்டு வனச்சாலை திட்டமும் இதுவரை நிறைவேறவில்லை. கேரளாவிற்கு குறுகிய தூரத்தில் செல்லக் கூடிய இப்பாதைக்கு எம்ஜிஆர் காலத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டது. வனத்துறை அனுமதி கிடைக்காததால் செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது ப.ரவீந்திரநாத் எம்பி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். வனப்பகுதியில் அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு நடத்தியதுடன் மத்திய அரசிடமும் பரிந்துரை செய்வதாக தொிவித்துள்ளார்.

அகமலை வனச்சாலை கடந்த பல ஆண்டுகளாகவே சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் இலகுவான வெளி யுலக போக்குவரத்து அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்பாதையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் பொதுமக்களின் பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் அரசியல்வாதிகளின் கவனத்துக்குச் செல்கின்றன. இதுதவிர சங்கங்கள், அமைப்புகள் மற்றும் குழு செயல் பாட்டாளர்களும் தாங்கள் சார்ந்த குறைகளை அரசியல்வாதிகளிடம் கூறி வருகின்றனர்.

இதனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே தேனி மாவட்டத்தில் தனிநபர் முதல் சமூக பிரச்சினைகள் வரை தீர்வு காணும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

வரும் ஆட்சியில் கிடைக்கும் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதற்கு முன்னதாக உபரியாக கிடைக்கும் பிரச்சார கால பலன்கள் வாக்காளர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இதை உணர்ந்து பல்வேறு கட்சிகளும் மாவட்டத்தில் பிரச்சார நடவடிக்கைகளை மும்முரப்படுத்தி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x