Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களில் உ்ட் கட்டமைப்புகளை எப்படி உருவாக்க வேண்டும் என தெரியாமல் கட்டிடங்களை கட்டி வருகின்றனர் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி பங்கேற்றார். ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் கனிமொழி பேசும்போது, ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை. நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ரேஷன் கடையில் வழங்கும் அரிசியை வீட்டுக்கு எடுத்துச் செல்வதா? அல்லது சாக்கடையில் கொட்டிவிட்டு செல்வதா? என்ற நிலை உள்ளது.
இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனர். ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் வேலைவாய்ப்பு என அனைத்தையும் முடக்கிவிட்ட இந்த அதிமுக அரசால் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு அண்டை மாநிலங்களையும் அண்டை நாடுகளையும் நாட வேண்டிய நிலை உள்ளது’’ என்றார்.
பின்னர், அகரம்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் பாய் தொழிற்சாலையில் பாய் நெசவு தொழிலாளர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆம்பூர் சான்றோர்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆம்பூரில் நீண்ட நாள் கோரிக்கை யாக உள்ள ரெட்டித்தோப்பு மேம் பாலத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு வேலை வாய்ப்பும் இல்லாமல் படித்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி அமைக்கும்போது தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
அரசுத் துறையில் தகுதியானவர் களுக்கு லஞ்சம் இல்லாமல் அரசியல் தலையீடு இல்லாமல் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வற்றை அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு செய்யாத பல திட்டங்களை தேர்தலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடைசி நேரத்தில் அறிவித்த எந்த திட்டங்களும் நிறைவேற்ற முடியாது என முதலமைச்சருக்கே தெரியும்.
தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை முதல்வர் பழனிசாமி உறவினர்களே டெண்டர் எடுத்துள்ளனர். கட்டமைப்பு களை எப்படி உருவாக்க வேண்டும் என தெரியாமல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களில் கட்டிடங்களை கட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசியலில் மகளிருக்காக எதையுமே செய்யாமல் தற்போது மகளிர் குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி என அறிவித்திருப்பது ஏமாற்றுவது என மகளிருக்கு நன்றாக தெரியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT