Published : 27 Feb 2021 10:29 PM
Last Updated : 27 Feb 2021 10:29 PM
மத்தியில் ஆளும் மோடி ஆட்சிக்கு துதிபாடும் அதிமுக ஆட்சியை அகற்றுவோம். தமிழ்நாட்டை ஒன்றிணைந்து காப்பாற்றுவோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றத் தேர்தல் பணிக்குழுவினர் மாநாட்டில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:
சிலர் அரசியலுக்காக, தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களின் நண்பர்களாகக் காட்டிக் கொள்வார்கள். யாரென்று உங்களுக்குத் தெரியும். சிறுபான்மையினரின் நண்பர்களைப் போல நடிப்பார்கள். நாங்கள் அப்படி அல்ல என்பது உங்களுக்கு தெரியும். அதனால் தான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் கருணாநிதி எவ்வளவு மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வாரோ, அவரது மகன் ஸ்டாலினாகிய நானும் அப்படியே கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழின் பின்பக்கத்தில் ஒரு முழக்கத்தை பொறித்துள்ளீர்கள். ''தேர்தல் பணிகளைக் கற்று கடமை ஆற்றிடுவோம்! மதச்சார்பற்ற கூட்டணி வென்று திமுகவை அரியணையில் ஏற்றிடுவோம்!" என்று அச்சடித்துள்ளீர்கள்
திமுகவை அரியணையில் ஏற்றுவோம் என்ற உங்கள் உறுதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக அரியணை ஏறுகிறது என்றால் அதில் தனிப்பட்ட திமுக மட்டுமல்ல, திமுகவுடன் சேர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் அரியணை ஏறுகிறது என்று தான் அர்த்தம். நாங்கள் பொறுப்புக்கு வருகிறோம் என்றால் அதில் பேராசிரியர் காதர் மொய்தீனும் பொறுப்புக்கு வருகிறார் என்று பொருள்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணா தன்னுடன் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தை இணைத்துக் கொண்டார்.
திமுகவுடன் முஸ்லீம் லீக் இணையும் போதெல்லாம் அரசியல் மாற்றம் நடந்துள்ளது. இப்போதும் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கப் போகிறது.
தேர்தல் பணிகளை எப்படி ஆற்ற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஏற்கனவே நீங்கள் அதில் வல்லுநராக இருக்கக்கூடியவர்கள் – அனுபவம் உள்ளவர்கள் – அதில் பயிற்சி பெற்று இருக்கக்கூடியவர்கள்.
இன்றைக்கு ஏதோ அ.தி.மு.க.வை எதிர்த்து போராடுகிறோம் என்பது மட்டுமல்ல. அ.தி.மு.க. மட்டும் என்றால் தூக்கி போட்டுவிட்டு சென்று விடலாம். ஆனால் மத்தியில் இருக்கும் ஒரு எதேச்சிகரமான ஆட்சி - பாசிச ஆட்சி - சர்வாதிகார ஆட்சி மிருக பலத்தோடு இருக்கும் ஆட்சி, மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சி - அதையும் எதிர்த்து போராட வேண்டிய கட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அந்த 2 கட்சிகளுக்கு ஒத்து ஊதும் ஒரு சதிக் கூட்டம் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி இன்றைக்கு பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால் - ஊடகங்களை எடுத்துப் பார்த்தால் அவர்களையும் மிரட்டி, உருட்டி எழுது வைக்கிறார்கள். அந்த எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
வெற்றி என்பது சாதாரணமாக தெரிகிறது. நான் அடிக்கடி பல கூட்டங்களில் இதைப் பேசியதுண்டு, சாதாரணமாக அந்த வெற்றியை பெற்றிட முடியாது. எவ்வளவோ எதிர்ப்புகள். இன்றைக்கு ஊடகங்களை பார்த்தால் பத்திரிகைகளைப் பார்த்தால் தொடர்ந்து நம்முடைய அணியை பற்றிக் கேவலப்படுத்தி - கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
எனவே எல்லா பக்கங்களிலும் எதிர்ப்பு. ஆனால் அந்த எதிர்ப்புகளைத் தாண்டி மக்கள் சக்தி நம் பக்கம் இருக்கிறது என்ற அந்த உள்ள
உறுதியோடு நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். களப்பணியாளர்கள்தான் வாக்குகளை சேகரிக்கும் அந்த பொறுப்பில் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு எப்படி எல்லாம் பயிற்சி தரப்பட்டு இருக்கிறதோ, அதை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்ற முன் வரவேண்டும்.
இன்றைக்கு நான் ஒரு இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பில் இருந்தாலும், எப்போதும் என்னை தலைவன் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. தலைமைத் தொண்டன் என்றுதான் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதைத்தான் நான் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுகிறேன்.
சிறுவயதில் நானும் களப்பணியாளராக பணியாற்றி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, முதன் முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்றத்திற்கு வேட்பாளராக நின்றபோது, நான் வெற்றி பெறும் வாய்ப்பை பெறவில்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். முதல் தேர்தல் 1984ஆம் ஆண்டு.
அப்போது முழுமையாக என் பக்கத்திலிருந்து தேர்தல் பணிகளைக் கவனித்தவர், மறைந்த ஆயிரம் விளக்கு உசேன்.
ஆயிரம் விளக்கு பகுதிக்கழகத்தின் செயலராக அன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருந்தவர். அதற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தலைமைக் கழகத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அந்த உசேன் தான் எனக்கு பொறுப்பு.
வீடு வீடாக என்னை அழைத்துச் சென்று வாக்கு கேட்பார். நான் அதை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது களப்பணியாளர் கூட்டமாக இருக்கின்ற காரணத்தினால் என்னுடைய நினைவெல்லாம் அங்கு சென்று விட்டது.
அப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிகமான குடியிருப்புகள் உண்டு. மாடிவீடுகள் உண்டு. காவலர் குடியிருப்பு உண்டு. பீட்டர்ஸ் காலனி உண்டு. குடிசை மாற்று வாரியம் உண்டு. வங்கி குடியிருப்புகள் உண்டு. 1 மாடி, 2 மாடி 3 மாடி 4 மாடிகள் எல்லாம் உண்டு.
ஒவ்வொரு வீடாக, 1 முறைக்கு 2 முறை வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்போம். இப்போது தெருவோடு ஓட்டு கேட்டு விட்டு சென்று விடுகிறோம்.
அப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கும் வழக்கம். ஒவ்வொரு வீடாக அழைத்துச் சென்று இவர்தான் கருணாநிதியின் மகன் - வேட்பாளராக நிற்கிறார் என்று அறிமுகம் செய்வார். 2 மாடி – 3 மாடி ஏறுவோம். ஒவ்வொரு மாடியும் ஏறும்போது மூச்சு இரைக்க ஆரம்பித்துவிடும். அப்படியெல்லாம் பணியாற்றினோம்.
ஆனால் இப்போதெல்லாம் விஞ்ஞான ரீதியாக வந்து விட்டது. அப்போதெல்லாம் செய்திகளை காலையில் எழுந்தவுடன் பத்திரிகைகளில்
படித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். இப்போது பத்திரிகை வருவதற்கு முன்பு முதல் நாள் இரவே தொலைக்காட்சிகளில் முக்கியச் செய்தியாக வந்துவிடுகிறது. தொலைக்காட்சிகளுக்கு முன்பு கையில் - செல்போனில் வந்து விடுகிறது. காலம் மாறிக்கொண்டே வருகிறது. அந்த மாற்றத்திற்கு தகுந்தவாறு நம்மையும் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், கொள்கைகளிலிருந்து என்றைக்கும் மாற மாட்டோம். நம்முடைய லட்சியத்தில் இருந்து என்றைக்கும் மாற மாட்டோம் என்ற உணர்வோடுதான் நம்முடைய பணியை நாம் ஆற்றிட வேண்டும்.
நம்முடைய பேராசிரியர் சொன்னார், தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். நாங்கள் சொல்லாமலேயே ஸ்டாலின் எதையும் செய்வார் என்று சொன்னார். நான் கேட்காமலேயே ஸ்டாலினுக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னார். நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என்பது நாங்கள் சொல்லாமலேயே உங்களுக்கும் தெரியும்.
அதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏதோ பட்டிமன்றத்திற்காக சொல்கிறேன் என்று நினைத்துவிடக்கூடாது. இருக்கும் எதார்த்த நிலையை சொல்கிறேனே தவிர, வேறு அல்ல.
எது எப்படி இருந்தாலும் நம்முடைய லட்சியம் - நம்முடைய கொள்கை. இங்கிருக்கும் இந்த ஆட்சி - மத்தியில் இருக்கும் மோடியின் ஆட்சிக்கு துதி பாடிக் கொண்டிருக்கும் - அடிமையாக இருக்கும் ஆட்சியிடமிருந்து இருந்து - நம்முடைய மாநில உரிமைகளை விட்டு தந்துகொண்டிருக்கும் கொடுமையிலிருந்து - தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு நாம் ஒன்றிணைவோம். வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT