Published : 27 Feb 2021 09:32 PM
Last Updated : 27 Feb 2021 09:32 PM
நான் ஊழல்வாதி இல்லை. அதனால், மோடி என்னை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என நாங்குநேரியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்ட ராகுல் காந்தி பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் , ’வாங்க ஒரு கை பார்ப்போம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
தமிழகத்துக்கு வருவது என்றால் எனக்கு மகிழ்ச்சி, ஆனந்தம். அந்த உணர்வை விளக்க முடியாது. ஆனால் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும்போது என் நெஞ்சம் தமிழகத்தோடு கலந்து விடுகிறது. அதை உணர்கிறேன்.
நான் வரும் வழியில் குழந்தைகள் கை அசைக்கும்போது, தாய்மார்கள் சிரிக்கும்போதும், வணக்கம் சொல்லும்போது நெகிழ்ந்துபோகிறேன். தமிழகம் சிரிக்கும்போது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைகிறது. ஆகவே என்னை சிரிக்க வைக்கும் தமிழகத்தை நான் சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே நீண்ட தொடர்பு இருக்கிறது. இந்திராவீன் மீது கொண்ட அன்பு, ராஜீவ்காந்தி மீது உங்களுக்குள்ள பாசம். அதையும் தாண்டி எனக்கும் தமிழக்ததுக்கும் பாசம் உள்ளது. இதை உணர்ந்து கொள்ள தமிழகத்தைப் பற்றி முழுமையாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இங்கு வரும்போது உங்கள் சரித்திரத்தைப் பார்க்கிறேன். தமிழர்களின் நிலைமை தற்போது மோசமாக இருந்தாலும் சுயமரியாதை இழக்காத தமிழர்களைப் பார்த்து மகிழ்கிறேன். அவர்களைப் பாராட்டுகிறேன்.
இந்தியா எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை தமிழகம்தான் நிர்ண்யிக்கவிருக்கிறது. இது எனது உணர்வு. இதற்கு காரணம் என்று தெரியவில்லை.
தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட முடியும், தமிழர்கள் வழிகாட்டுவார்கள். இதற்குக் காரணம் பல உள்ளன.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளனர். சீனாவின் மிரட்டலையும், நாட்டின் பொருளாதார படையெடுப்பை எதிர்கொள்ள சிறு, குறு தொழில்களால்தான் முடியும். கையிலுள்ள தொலைபேசி, சட்டை, காலனி உள்ளிட்ட பல பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கிறது.
ஆனால் நம்மிடம் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நல்ல சக்தி, கனவு இருந்தாலும், நம்மிடம் வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டத்தைப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது.
தமிழக அரசு ஒழுங்காக செயல்பட்டால் எந்தப் பொருட்களும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதைப்பார்க்க முடியும். அப்போது தமிழக தெருக்களில் வேலையில்லா இளைஞர்களை பார்க்க முடியாது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை அந்த பொருட்களின் மீது போடமுடியவில்லை.
புதுடெல்லியிலுள்ள மத்திய அரசு சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லை. விவசாயிகளை ஆதரிக்கவில்லை. இந்தியாவிலுள்ள சில தொழில் அதிபர்கள் பல லட்சம் கோடிகளைக் கடனாக பெறமுடிகிறது.
ஆனால் சிறு தொழிலாளர்கள் கடன் பெறமுடியவில்லை. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்களை வேலைவாய்ப்புகளை ஒழித்துவிட்டது. 5 நிலைகளில் வரி, 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பும் தொழில்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.
வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும்போது உங்கள் பைகளில் உள்ள பணத்தை மத்திய அரசு களவாடுகிறது.
வழக்கமாக பணக்காரர்களுக்கு வரிவிதிக்க வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும். ஆனால் ஏழைகளுக்கு வரிவிதித்து, பணக்காரர்களுக்கு மத்திய அரசு உதவுகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு ஏழைகளுக்கு எதிராக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறி கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது.
இப்போது விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை கொண்டுவந்துள்ளார்கள்.
பிரதமரைப் பற்றி கூறுவதற்கு நான் பயப்படவில்லை. அவர் என்னை பயமுறுத்துவார் என்றால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. மோடி என்னை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. என்னைத் தொடக்கூட முடியாது. காரணம் நான் முழுக்க முழுக்க நேர்மையானவர், நான் ஊழல்வாதி இல்லை. உண்மையைச் சொல்கிறேன். நான் நேர்மையானவன் என்பதாலேயே பிரதமர் என்னைப் பற்றி 24 மணிநேரமும் குறை சொல்கிறார். என்னைப் பற்றிய உண்மையை அவருடைய நெஞ்சம் அறியும். அதேவேளையில் அவர் நேர்மையற்ற்றவர் என்பதும் அவருக்குத் தெரியும்.
இரவில் 30 வினாடிகளில் நான் தூங்கிவிடுகிறேன். தமிழக முதல்வர் நிம்மதியாக தூங்க முடியாது. காரணம் அவர் நேர்மையானவர் அல்ல. அதனால் அவரால் மோடியை எதிர்கொள்ள முடியவில்லை.
தமிழக முதல்வரைக் கட்டுப்படுத்துவதால் தமிழகத்தை கட்டுப்படுத்தலாம் என்று மோடி நினைக்கிறார். ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழக மக்களை பட்டன் மூலம் இயக்க நினைக்கிறார். வால்யூம் கூட்டினால் முதல்வர் சத்தம்போடுவார், குறைத்தால் அமைதியாக இருப்பார். தமிழக மக்களையும் தன் ஆளுக்கைக்குள் வைக்க நினைக்கிறார். விரைவில் ரிமோட் கன்ட்ரோல் பேட்டரியை தமிழக மக்கள் எடுக்கப்போகிறார்கள்.
தமிழக மக்கள் எதிர்காலத்தை வேறுயாரும் அபகரித்துச் செல்ல முடியாது. அதை நிர்ணயிக்கவும் முடியாது. நான் உங்கள் வரலாற்றைப் படிக்கிறேன். அப்போது தான் தமிழக மக்கள் மனதில் நான் இடம்பெற முடியும் என்பது எனக்கு தெரியும்.
தமிழக மக்களுக்கு சிறிய மரியாதையை செய்தால் பெரிய அளவில் பதில் மரியாதை செய்வார்கள். தமிழகத்துக்கும் எனக்கும் உள்ள உறவு அப்படியே இருக்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன். இந்த உறவை வளர்க்க வேண்டும். அது முடியும் என நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
தமிழகத்துக்கு புதிய வழியை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதற்கு இளைஞர்களின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்தியாவுக்கு பாதை வகுத்துத் தரமுடியும். இதுவே எனது கனவு, எனது நம்பிக்கை. இங்குவரும்போதும் இங்கிருந்து திரும்பும்போதும் ஒரு புதிய தெளிவுடன் செல்கிறேன். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
உப்பளத் தொழிலாளர்களிடம் பேசினேன். வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்கள். உப்புத் தண்ணீரில் கால்களில் காலணிகளை அணியாமல் மணிக்கணக்கில் உழைக்கிறார்கள். ஆனால் போதிய ஊதியத்தை அவர்களால் பெறமுடியவில்லை.
அவர்கள் யார் முகத்திலும் என்னால் மகிழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை. நான் உப்புபோட்டு சாப்பிடும்போது அவர்களை நினைப்பேன். கரோனாவுக்கு மருந்தாக உப்பு செல்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்கள். இந்த தேசத்தைக் காக்க தாங்கள் தயாரிக்கும் உப்பு உதவுவதாக தெரிவித்தனர். அதுதான் தமிழகத்தின் பெருமை என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் சிறப்பான ஏற்பாட்டுக்காக ரூபி மனோகரனுக்கும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், டாக்டர் செல்வகுமார், மாணிக்தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:
தமிழகத்தை தேசிய களமாக மாற்றியவர் காமராஜர். பெருமை மிகு அரசியல் கட்சி காங்கிரஸ். மற்ற அரசியல் கட்சிகளுக்கு இல்லாத பெருமை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அதற்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. குடும்பத்தில் 2 பேரை இழந்தும் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார் ராகுல்காந்தி. இந்தியாவை மேம்படுத்தும் பொருட்டு அவர் அரசியலுக்கு வந்துள்ளார். எல்லோருக்கும் கல்வி வேண்டும் என்பதுதான் காமராஜரின் கொள்கை.
இன்று இந்தியாவில் தமிழகம் வளர்ந்துள்ளதற்கு காரணம் காமராஜர்தான். அவருக்கு மாற்று உருவமாக ராகுல்காந்தி வந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக அதிகாரத்தில் காங்கிரஸ் இல்லை. தூத்துக்குடியில் தொடங்கி நாங்குநேரி வரை கூட்டம் வந்துள்ளது எதிரிகளுக்கு மட்டுமல்ல, நண்பர்களுக்கும் ஆச்சரியம்.
நாட்டிலிருந்து மோடி ஆட்சியை தூக்கி வீச வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அதை சாதித்துக் காட்டியிருக்கிறோம். அதை நாடு முழுக்க செய்ய வேண்டும். இதற்கு வலுவான பரப்புரை வேண்டும். இதற்காக ராகுல் வந்துள்ளார். அவருடன் காரில் வரும்போது சொன்னார், தமிழகத்தைவிட சிறிய நாடு தென்கொரியா, தமிழகத்தை போன்ற இடம் ஜப்பான்.
தமிழகத்தை ஏன் மாபெரும் பகுதியாக மாற்ற முடியாது என்று கேட்டார். தமிழகத்தில் ஊழலுக்கு இலக்கணமான அதிமுக அரசை தூக்கி எறிய மதசார்பற்ற கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் வரலாற்றைத் திரித்து எழுத பாஜக முயல்கிறது. இதை தகர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி பேசியதாவது:
ராகுலின் சுற்றுப்பயணம் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாஜக ஆட்சியாளர்கள் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள். அதை தமிழகத்திலும் திணிக்கப்பார்க்கிறார்கள். அதை தடுக்கும் ஒரே தலைவர் ராகுல்காந்தி. தமிழகத்தில் சட்டப் பேரவையில் கடைசி நாளில் அதிக அறிவுப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.
ஏன் கடந்த ஆண்டுகளில் இதை செய்யவில்லை. இதை மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். இப்போதைய அமைச்சர்கள் மத்திய அரசிடம் அடிபணிந்துவிட்டார்கள். மத்திய அரசின் தயவு அவர்களுக்கு தேவைப்படுகிறது. காரணம் அவர்கள் ஊழல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் மாற்று அரசு அமைய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT