Published : 03 Jun 2014 12:00 AM
Last Updated : 03 Jun 2014 12:00 AM
"ஜனனத்தைப் போன்ற ஒரு புதியதும் இல்லை, மரணத்தைப் போன்றதொரு பழையதும் இல்லை இந்த உலகில்” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, இறந்தவரின் உடலை தகனம் செய்ய காத்திருப்பவர்கள் மௌனமாக அமர்ந்திருக்கின்றனர். இதுதான் பிரவீணா சாலமனுக்கும் எஸ்தர் ஷாந்திக்குமான அன்றாட பணியிடம்.
மயானங்களுக்குள் பொதுவாக பெண்கள் நுழையக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்து, பெண்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் இவர்கள்.
சென்னை, கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில் ஆர்.டி.ஓ.அலுவலகம் அருகில் உள்ள வேலங்காட்டில் உள்ள மாநகராட்சி மயானத்தை எடுத்து நடத்திவரும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் என்ற அமைப்பிலிருந்து நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்.
கடந்த இரண்டரை மாதங்களாக இந்த மயானத்தை நடத்திவரும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் இயக்குநர் ஹரிஹரன் கூறுகையில், “சுடுகாடு என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள், அது ஆண்கள் சூழ்ந்த இடமாக இருக்கிறது. இதை மாற்றி பெண்களும் மயானத்துக்குள் வருகின்ற சூழலை உருவாக்க முயல்கிறோம். அமைதியான சூழலை ஏற்படுத்த மரணத்தைப் பற்றிய வைரமுத்து பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்” என்றார்.
இங்கு மேற்பார்வையாளராக இருக்கும் எஸ்தர் ஷாந்தி கூறுகையில், “நான் இங்குதான் வேலை செய்கிறேன் என்று முதல் இருபது நாட்களுக்கு எனது வீட்டில் தெரியாது. எனது கணவருக்கு இதைப் பற்றி கூறிய பிறகு, அவர் இங்கு வந்து அரை நாள் இருந்து எனது வேலைகள் என்ன என்று தெரிந்துகொண்டு போனார்” என்றார்.
அவரது பணியிடத்தில் முதல் சில நாட்களை பற்றி கூறுகையில், “முதலில் மிக பயமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருப்போம். ஆனால், வேலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடல்கள் தகனம் செய்யும் இடத்துக்கு செல்ல ஆரம்பித்தோம்.
இங்கு இருக்கும் உதவியாளர்கள் எங்களுக்கு பயம் தெளிய வேண்டும் என்பதற்காக, எங்களை தனியே விட்டுச் சென்றுவிடுவார்கள். அப்படித்தான் நாங்கள் பழகிக் கொண்டோம். இப்போது இங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் செய்ய கற்றுக்கொண்டோம்” என்கிறார் எஸ்தர்.
ஏற்கெனவே இந்திய சமுதாய நல வாழ்வு தொண்டு நிறுவனத்தில் பலதரப்பட்டவர்களோடு இருவரும் பணிபுரிந்திருப்பதால், இறந்தவர்களின் உறவினர்களை அன்பாக கையாள தெரிந்தவர்களாக இருக்கின்றனர். தனது அனுபவங்களை பற்றி பிரவீணா கூறுகையில், “ஆதரற்றவர்களின் உடல்கள் ஏதாவது இல்லங்களிலிருந்து வந்தால், நாங்கள் மாலை வாங்கிப் போட்டு, கடைசி வரை உடனிருப்போம். இரண்டு நாட்கள் முன், ஒரு பெண்ணுடைய கணவர் இறந்துவிட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, மதுரையிலிருந்து நேரடியாக மயானத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவரால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. தரையில் புரண்டு அழுதார். எனவே அடுத்து தகனம் செய்ய உடல்கள் காத்திருந்தாலும், அவரிடம் நிலைமையைப் புரியவைத்து அந்த பெண்ணுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தோம்”என்கிறார்.
இந்த வேலைக்கு வந்த பிறகு, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் எஸ்தர் கூறுகையில், “என்னதான் வாழும்போது சுகங்களை அனுபவித்து சாதி, பணம் என பாகுபாடு கண்டிருந்தாலும், இங்கு வந்து சிலமணி நேரங்களில் எல்லாரும் சாம்பலாகி விடுகின்றனர். இங்கு வந்தபின் நான் அடிக்கடி கோபப்படுவதை நிறுத்திக் கொண்டேன். இதை மிக உன்னதமான வேலையாகக் கருதுகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT