Last Updated : 27 Feb, 2021 08:19 PM

1  

Published : 27 Feb 2021 08:19 PM
Last Updated : 27 Feb 2021 08:19 PM

கல்லூரியின் காவலனாக விளங்கிய நாய் திடீர் மரணம்: கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி வளாகத்தில் இறந்த நாய்க்கு பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இறுதிச்சடங்கு செய்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி

திருச்சியில் கல்லூரி வளாகத்தைச் சுற்றிச்சுற்றி வந்து காவல் காத்த நாய்க்கு மாணவர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, இறுதிச் சடங்கு செய்தனர்.

திருச்சி காஜாமலையிலுள்ள பெரியார் ஈவெரா கல்லூரி வளாகத்திலேயே மாணவர் விடுதிகள் மற்றும் கேண்டீன் அமைந்துள்ளன. எனவே இங்கு செய்யக் கூடிய உணவுப் பொருட்களில் மீதமிருப்பவற்றைச் சாப்பிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சில நாய்கள் எப்போதும் கல்லூரி வளாகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். இவை மீது இரக்கப்பட்டு இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்குவதும் உண்டு.

இங்கு விலங்கியல் துறையில் பணிபுரிந்த பேராசிரியர் தமிழரசனால் 'டோரா' எனப் பெயரிடப்பட்ட வெள்ளை நிறப் பெண் நாய் ஒன்று, பல ஆண்டுகளாக இந்தக் கல்லூரிலேயே தங்கி, வளாகத்தைச் சுற்றிச்சுற்றி வந்து காவல் பணியிலும் ஈடுபட்டு வந்தது. இந்த நாய் திடீரென இன்று இறந்தது.

இதையறிந்த தமிழரசன் மற்றும் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து டோராவின் உடலை மீட்டனர். பின்னர் அந்த நாயின் மீது பன்னீர், சந்தனம் தெளித்து, மஞ்சள் மற்றும் குங்குமமிட்டு இறுதிச் சடங்குகளைச் செய்து கல்லூரித் தோட்டத்திலேயே குழிதோண்டி அடக்கம் செய்தனர். பின்னர் அதன் மீது மலர்கள் தூவி, மலர் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து இக்கல்லூரி மாணவர்கள் கூறும்போது, ''பல ஆண்டுகளாக இந்த கல்லூரியிலேயே வளர்ந்து வந்த டோரா, மாணவர்களுடன் கொஞ்சி விளையாடும். அவர்கள் சொல்வதைக் கேட்டு, காலால் மண்டியிட்டு வணக்கம் செலுத்தும். ஆகவே மற்ற நாய்களைவிட இதன்மீது மாணவர்கள் அதிக பாசத்துடன் இருப்பர்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x