Published : 27 Feb 2021 07:36 PM
Last Updated : 27 Feb 2021 07:36 PM
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நமக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் நிச்சயம் கிடைக்கும் என்று கட்சிக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசும்போது, ‘'கடந்த 10 ஆண்டுகளாகத் திமுக ஆட்சியில் இல்லை. இதனால் கட்சிக்காரர்களுக்குக் கிடைக்கவேண்டிய எந்தப் பணிகளும், திட்டமும் கிடைக்காமல் போய்விட்டது. தமிழ்நாட்டிலும் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக முடங்கிவிட்டன. ஆளுங்கட்சிக்காரர்கள் நாட்டை வளப்படுத்தாமல், தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டுவிட்டனர்.
வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் டெல்டா மாவட்டங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். இங்குள்ள 46 தொகுதிகளில் 40 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 150 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுகவினர் எவ்வளவு செலவு செய்தாலும் வெற்றி பெற முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நமக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் நிச்சயம் கிடைக்கும்'' என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியின்போது, ‘'தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, நேற்று முன்தினம் இரவு அவசரம் அவசரமாகப் பல அரசு அலுவலகங்களில் டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை ரத்து செய்யத் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்.
தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது என்பதால் முதல்வர் பழனிசாமி கடைசி நேரத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என ஏராளமான அறிவிப்புகளை வெளியிடுகிறார். இவற்றை நடைமுறைப்படுத்தப் போவதில்லை. தேர்தலுக்காகவே சொல்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது செய்யாதவர்கள், கடைசி நேரத்தில் அறிவித்தால் எப்படி செயல்படுத்த முடியும், நிதி ஒதுக்க முடியும், அரசாணை வெளியிட முடியும். இந்த அறிவிப்புகள் எதுவும் மக்களிடத்தில் எடுபடாது. திமுக கூட்டணியிலிருந்து ஐஜேகே வெளியேறியதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்குத்தான் இழப்பு. திருச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில், பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டணி கட்சியினரின் வேட்பாளராக அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெற வைப்பதே கூட்டணி தர்மம். எனவே அதை செய்வதைத் தவிர வழியில்லை.
அதிமுக ஆட்சியில், போகிற போக்கில் பல திட்டங்களை அறிவித்துவிட்டுச் செல்கின்றனர். இதுதொடர்பான நிதிச்சுமை, நிதி ஆதாரங்கள் குறித்து வரக்கூடிய திமுக ஆட்சியில் பொருளாதார வல்லுநர்களை வைத்து உரிய தீர்வு மேற்கொள்ளப்படும்'' என்று கே.என்.நேரு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT