

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுடைய நம்பிக்கையை இழந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது என, சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) கலைவாணர் அரங்கில், சட்டப்பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திமுகவை அவர் விமர்சித்து பேசியதாவது:
"ஊர் ஊராகப் போய், நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகள் கொடுத்து, திமுகவினரை விட்டு மக்களிடம் மனு எழுதச் செய்து, அதை வாங்கி ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டுகிறாராம் ஸ்டாலின். பூட்டியதோடு மட்டுமல்லாமல், அதற்கு அரக்கு வைத்து, சீலும் வைக்கப்படுகிறது. ஏனென்றால், இது பெரிய ராணுவ ரகசியம் பாருங்கள். ஆனால், அரசு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மனு வாங்குகிறது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உட்கார்ந்து மனுவை வாங்குகிறார். அதற்குரிய தீர்வை ஒரு வாரத்திற்குள் முடிக்கிறார்கள்.
செவ்வாய்கிழமையும் மனு வாங்குகிறார்கள். அதற்குரிய தீர்வையும் முடிக்கிறார்கள். புதன் கிழமையும் மனு வாங்குகிறார்கள். அதற்குரிய தீர்வையும் முடிக்கிறார்கள். வியாழக்கிழமையும் மனு வாங்குகிறார்கள். அதற்குரிய தீர்வையும் முடிக்கிறார்கள். வெள்ளிக் கிழமையும் மனு வாங்கப்படுகிறது. ஆக, ஒவ்வொரு வாரத்திலும் வேலை நாட்களில் அரசின் சார்பாக மனு வாங்கப்படுகிறது. உடனடியாக தீர்வும் காணப்படுகிறது. இதுதான் ஒரு நல்ல அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணி.
அதை நிறைவாக செய்து கொண்டிருக்கின்றோம். இவர் ஊர் ஊராகப் போவாராம். மனு வாங்குவாராம், வாங்கி ஒரு பெட்டியில் போட்டு பூட்டுவாராம். திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டுவாராம். அதை துணியை வைத்து கட்டி, அரக்கும் வைப்பாராம். எப்பொழுது 100 நாட்கள் கழித்து அதை திறந்து பார்ப்பாராம். என்ன விந்தையான வேடிக்கை. மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்ற வேண்டுமென்று ஊர் ஊராகச் சுற்றி பொய் பிரச்சாரம் செய்கின்ற நிலை தான் இன்றைக்கு எதிர்க்கட்சிகளின் நிலை. அது அவருடைய நிலை. அவர்கள் மனு வாங்கியவுடன் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதிமுக அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உடனடியாக அனுப்பி, அதற்குரிய பதில் வரவில்லை என்று சொன்னால், ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறீர்கள் என்று பொருள். இப்படியெல்லாம் சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது.
ஏனென்றால், நீங்கள் மக்களுடைய நம்பிக்கையை இழந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது. என்றைக்கும் இல்லை, இன்றைக்கும் இல்லை, என்றைக்குமே உங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். 100 நாட்களில் மக்களின் குறைகளைத் தீர்த்துவிடுவாராம் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் 'சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது' என்று நாங்கள் சொல்லவில்லை, மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு துரோகம் செய்தார்கள். எவ்வளவோ துரோகம். ஆற்ற வேண்டிய கடமைகளை, தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகளை பெற்றுத் தர வேண்டிய கடமைகளை தமிழகத்திற்கு காலம் காலமாக, பாரம்பரியமாக பெற்று வந்த உரிமைகள் பறி போகின்ற சூழல் ஏற்படுகின்றபோது அதைக் காப்பாற்றுகின்ற அரசாக அந்த அரசு செயல்படவில்லை.
நீங்கள் ஊர் ஊராகப் போய், பல வேஷங்களை எல்லாம் போட்டு, மக்களை ஏமாற்ற முடியாது. தமிழக அரசு, குறைகள் இல்லாத ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
கரோனா காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை, எளிய மக்களுக்கு, நேரடி பண உதவியை வழங்கவில்லை எனவும், நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவில்லை எனவும், முற்றிலும் தவறான முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்று தாக்கிய சமயத்தில், நேரடியாக மக்களைச் சென்றடையும் வகையில் 3,176.67 கோடி ரூபாயும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இதுவரை இல்லாதவகையில் 5,604.84 கோடி ரூபாய் நேரடி ரொக்கப் பண உதவியும், நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,715 கோடி ரூபாயும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவிகள் எதிர்க்கட்சியினர் கண்களுக்குத் தெரியாமல் போனதுதான் பெரும் துரதிருஷ்டம் ஆகும்.
மேலும், மூலதனச் செலவினங்களுக்கு தமிழ்நாடு போதுமான நிதி ஒதுக்கவில்லை எனவும் மிகவும் தவறானதொரு குற்றச்சாட்டும் பரப்பப்பட்டு வருகின்றது. இதெல்லாம் இங்கிருந்து சொல்லவில்லை. வெளியில் இருந்து சொன்னாலும், அதற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை ஒரு அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துதான், நல்லரசாக செயல்படும் தமிழக அரசு, இந்த விளக்கத்தையெல்லாம் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு இருப்பதனால், இதை நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். மேலும், மூலதனச் செலவினங்களுக்கு தமிழ்நாடு போதுமான நிதி ஒதுக்கவில்லை எனவும் மிகவும் தவறானதொரு குற்றச்சாட்டினை, அவர் இன்று சென்றுகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரப் பரப்புரையில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
2020-2021 ஆம் ஆண்டில், குறைந்தபட்சம் 10 ஆயிரம் கோடி ரூபாய், கூடுதல் மூலதனச் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரையின் மீது அம்மா அவர்களது அரசு, முனைப்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டு, மூலதனப் பணிகளுக்கு, ஒட்டுமொத்தமாக 20 ஆயிரத்து 13 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக ஒப்புதல் வழங்கப்பட்டன.
அதாவது இழந்த பொருளாதாரத்தை மீண்டும் சரிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சி. ரங்கராஜனின் குழுவின் பரிந்துரையில் சொன்னது, ரூ.10 ஆயிரம் கோடியை நீங்கள் கூடுதல் மூலதனச் செலவினமாக செலவழிக்க வேண்டுமென்று சொன்னார்கள். ஆனால், நாம் அதை இரண்டு மடங்காக 20 ஆயிரத்து 13 கோடி ரூபாயை இன்றைக்கு நாம் கூடுதலாக மூலதனச் செலவாக, நாம் ஒதுக்கியிருக்கிறோம்.
2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவினங்கள், 36 ஆயிரத்து 367.78 கோடி ரூபாயைக் காட்டிலும், 2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தை நாம் சமர்ப்பிக்கும்போது மூலதனச் செலவுகளுக்கு 36 ஆயிரத்து 367.78 கோடி ரூபாய் என்றுதான் இருந்தது. ஆனால் அந்த ரூபாயைக் காட்டிலும் இன்றைக்கு 2020-2021 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், 37 ஆயிரத்து 734.42 கோடி ரூபாயாக இன்றைக்கு உயர்ந்து சாதனைப் படைத்திருக்கிறோம்.
2021-2022 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக, 43 ஆயிரத்து 170.61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு நலம் தரும் இத்தகைய மூலதனச் செலவினங்கள் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளித்து, புத்துயிர் பெறுவதற்கு உதவும்.
தமிழக அரசின் மீது, எதிர்க்கட்சிகள் எந்த அளவு மிகத் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றன என்பதற்கு, நான் இதுவரை சொல்லிவருகின்ற சரியான எடுத்துக்காட்டு, சரியான காரணங்களாகும்.
திமுக ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் குறைந்து விட்டது என்ற ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது, வருமான சதவீதம் எவ்வளவு என்று பேசுவதில் அர்த்தம் இல்லை. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயைக் கணக்கிட்டு, அதனை, மாநில வரி வருவாய் மற்றும் கடன் அளவு பற்றி ஒப்பீடு செய்யவும், பொருளாதார நிலையைப் பற்றி ஒப்பீடு செய்யவும், பொருளாதார நிலையைப் பற்றி ஆராயவும், பயன்படுத்துவோம்.
பொருளாதாரத்தின் அடிப்படைக் கருத்துகள் பற்றி சற்றும் தெரியாதவர்கள்தான், இப்படி தவறான குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றார்கள் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. எனவே இவ்வாறு தவறாக விமர்சனம் செய்வதற்கு திமுகவுக்கு எவ்வித தார்மீக உரிமையும், தார்மீகத் தகுதியும் கிடையாது. ஏன் என்று சொன்னால், 14-வது நிதிக் குழுவின் அறிக்கையில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டினுடைய மொத்த வரி வருவாய் 2006-2007 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் 8.9 சதவிகிதமாகவும், அதே காலக்கட்டத்தில் அடுத்த வருடம் 2007-2008 ஆம் ஆண்டில் 8.4 சதவிகிதமாகவும், 2008-2009 ஆம் ஆண்டில் 8.4 சதவீதமாகவும், 2009-2010 ஆம் ஆண்டில் 7.6 சதவீதமாகவும், தொடர்ச்சியாக, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாயின் சதவீதம், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் சொந்த வருவாய், அதாவது வீழ்ச்சி அடைந்து கொண்டே வந்தது திமுக மைனாரிட்டி ஆட்சியில்.
2011-2012 மற்றும் 2012-2013 ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் மாநில சொந்த வரி வருவாயை உயர்த்துவதற்கான பல முயற்சிகளை எடுத்ததன் வாயிலாக, சொந்த வரி வருவாயின் பங்கு, முறையே 8.99 சதவீதமாகவும் 9.6 சதவீதமாக உயர்ந்தது.
15-வது நிதிக்குழு அதன் அறிக்கையில், மத்திய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கை குறிப்பிட்டுள்ளது. இவை, மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய வரி வருவாயின் பங்காக இல்லை. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கானது, 2011-2012 ஆம் ஆண்டில் 10.4 சதவீதத்திலிருந்து 2019-2020 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதை கணக்கிடும்போது, 2011-2012 ஆம் ஆண்டு முதல் 2019-2020 ஆம் ஆண்டு வரை, மேல்வரி மற்றும் கூடுதல் கடன் அதிகரித்து வந்ததால், தமிழக அரசுக்கு 43 ஆயிரத்து 77.48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கான வரிப் பகிர்வு 42 சதவீதமாக 14-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இது 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி 41 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மத்திய அரசின் 100 ரூபாய் வரி வருவாயில் 42 ரூபாய் கிடைத்திருந்த நிலையில், தற்போது 41 ரூபாய் மட்டுமே கிடைக்கும். மேலும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதித்ததன்மூலம், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிதி வருவாயை மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, 100 ரூபாயாக இருந்த மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய மத்திய அரசின் வரி வருவாய் தற்போது 80 ரூபாயாக குறைந்துள்ளது. எனவே, மத்திய அரசிடமிருந்து நமது மாநிலத்திற்கு உரிய வருவாய் குறைந்து கொண்டே வருகின்றது.
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்கான ஆரம்ப காலகட்டமான ஐந்து ஆண்டுகள் 2021-2022 ஆம் ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. வரும் ஆண்டுகளில், மாநிலத்திற்கு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வரி வருவாய் வரும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்த திட்டத்தில் நாம் கலந்துகொண்டோம். இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் மாநிலங்கள் தங்களின் முதன்மை வருவாய் ஆதாரத்தின் மீதான சுய உரிமையை விட்டுக்கொடுத்தன.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதனால், வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. வருவாய் வளர்ச்சியில் இந்த மந்த நிலையின் காரணங்களை தீர ஆராய வேண்டும். இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் மாநில அரசின் வருவாயைப் பாதுகாக்க வேண்டும். 2022-2023 ஆம் ஆண்டில் மாநிலங்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, இழப்பீட்டுத் தொகையை தொடர்ந்து வழங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு மேலும் வரி விதிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் போன்ற மாற்று உத்தி முறைகளை, சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்கின்றோம். மாநிலங்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, இந்த முக்கியமான பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், வழக்கமாக எந்த ஒரு திட்டமும், எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படாது. அந்த மரபை நாங்கள் இந்த ஆண்டும் பின்பற்றினோம்.
தற்போது அதிமுக அரசு, முக்கியமான துறைகளுக்கான ஒதுக்கீட்டை 2020-2021 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளிலும் 2021-2022 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்திலும் அதிகரித்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சில முக்கிய துறைகளின் நிதி ஒதுக்கீட்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.
2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கு 15 ஆயிரத்து 863.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2021-2022 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் 19 ஆயிரத்து 420.54 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், பள்ளிக் கல்வித் துறைக்கு 34 ஆயிரத்து 181.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2021-2022 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் 35 ஆயிரத்து 668.65 கோடி ரூபாயாக அது உயர்த்தப்பட்டிருக்கிறது. 2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பொதுப் பணித் (பாசனம்) துறைக்கு 6,991.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனச் செலவினங்களை ஊக்குவிக்கும் விதமாக, 2021-2022 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் 9,436.97 கோடி ரூபாயாக அது உயர்த்தப்பட்டிருக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு செயல்படுத்தியது. 2020-2021 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் அத்தொகை 9,604.27 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக 747.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2020-2021 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் அத்தொகை 812.09 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்காக 1,707.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் அத்தொகை 2,603.35 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்திலிருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், நீண்டகால நிதி இழப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய இடைக்கால நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, பொருளாதார வல்லுநர்கள், பயிற்றுநர்கள் மற்றும் நிபுணர்களைக் உள்ளடக்கிய ஒரு உயர்மட்டக் குழு, முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்டது.
பல்வேறு துறைகளைச் சார்ந்த 413 பரிந்துரைகளையும் குறிப்புகளையும் இக்குழு அரசுக்கு வழங்கியது. இக்குழுவின் பரிந்துரைகளை முனைப்புடன் செயல்படுத்தத் தொடங்கி, இதுவரையில் 273 பரிந்துரைகளை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
ஆக, இதனால், கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும்கூட, இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில், இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 1 லட்சத்து 69 ஆயிரத்து 496 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்விதமாக, 88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடுகளுக்கான 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இது மிகப் பெரிய வரலாற்று சாதனையாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது நம்முடைய அரசு. இதன் காரணமாக, நமது மாநிலத்தின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றது.
தேசிய அளவில் -7.7 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி இருந்தபோதும், நமது மாநிலம் 2.2 நேர்மறை வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது, தேசத்தை ஒப்பிடும் பொழுது நமது மாநிலத்தில் சுமார் 10 சதவீதம் அதிகமாக வளர்ச்சி காணப்படுகின்ற நிலை கரோனா பெருந்தொற்று இருந்தபோதிலும் ஏற்பட்டுள்ளது".
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.