Published : 27 Feb 2021 05:10 PM
Last Updated : 27 Feb 2021 05:10 PM
காங்கிரஸ்- திமுக கூட்டணி உறுதியாகத் தொடர்கிறது எனவும், திமுக அதிக தொகுதிகளைக் கேட்டால் கொடுப்போம் எனவும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரிடம் இருந்து பிப்.27 (இன்று) முதல் மார்ச் 5-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை விருப்ப மனு பெறப்படும் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியின் தெரிவித்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் இதைத் தொடங்கி வைத்தனர்.
தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தொகுதிகள் வாரியாக விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம், விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்கின்ற குழுவின் தலைவர் ஏ.கே.டி.ஆறுமுகம் தலைமையில், தனுசு, சுவாமிநாதன், இளையராஜா அப்துல் ரகுமான் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், ஏ.வி.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கட்சியினர் உற்சாகத்துடன் வந்து விருப்ப மனுக்களை அளிக்கின்றனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி உறுதியாகத் தொடர்கிறது. எங்கள் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். 24 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம். இங்கு பாஜக, பிரதமர் மோடி மீதான எதிர்ப்பலை நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிகமாக வீசுகிறது. இதனால் புதுச்சேரியில் பாஜகவுக்கு இடமில்லை. அவர்களின் கூட்டணியில் இருக்கின்ற என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவினருக்கும் வெற்றிக்கு வாய்ப்பில்லை.
காங்கிரஸ்- திமுக கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சென்னையிலும் புதுச்சேரியிலும் இதற்காக இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுத்துச் செயல்படுவோம். அவர்கள் அதிக தொகுதிகளைக் கேட்டாலும் பரிசீலனை செய்து வழங்குவோம், நாங்களும் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம். திமுக போட்டியிட விரும்பும் தொகுதியையும் கொடுப்போம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT