Published : 27 Feb 2021 04:52 PM
Last Updated : 27 Feb 2021 04:52 PM
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்குத் தொகுதிகள் பேசி முடிவாகியுள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையில் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனியாக நிற்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் அதிலிருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளார். அதேபோன்று திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே கட்சியும் வெளியேறியுள்ளது.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணியா? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியா? முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கூட்டணி வேட்பாளரா? அதிமுகவுக்கான முதல்வர் வேட்பாளரா? என்கிற கேள்வியெல்லாம் முன்பு எழுந்தது.
ஒருவழியாக தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. அதன் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்திப்போம், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் எனக் கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொண்டன. இடையே வன்னியருக்கு 20% உள் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி என ராமதாஸ் கூறினார். நேற்று 10.5% உள் ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டு, பாமகவைக் கூட்டணியில் தக்கவைத்தது அதிமுக தலைமை.
தேர்தல் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை பாஜக தலைவர் முருகன் தலைமையிலான குழுவினர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினர். இதில் பாஜக 40 தொகுதிகள் வரை கேட்டதாகப் பேச்சு அடிபட்டது. அதிகமான தொகுதியில் நின்றால்தான் மெஜாரிட்டியை நோக்கி அதிமுக நகர முடியும் என்பதால் குறைந்தது 170 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதால் அவ்வளவு தர முடியாது எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று 10.5% உள் ஒதுக்கீடு காரணமாக சந்தோஷத்தில் இருந்த பாமக தலைவர்கள் இன்று மதியம் நடத்திய பேச்சுவார்த்தையில் 22 தொகுதிகள் பேசி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது அதிமுக தலைமை என்றும் பேச்சு அடிபடுகிறது. இதேபோன்று தேமுதிகவுக்கு 10 இடங்களும், தமாகாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 234 தொகுதிகளில் பாஜக 20, பாமக 22, தேமுதிக 10, தமாகா 5. மொத்தம் 57 தொகுதிகள் போக சிறு கட்சிகளை இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட வைக்கும் முடிவில் அதிமுக தலைமை உள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT