Last Updated : 27 Feb, 2021 04:59 PM

2  

Published : 27 Feb 2021 04:59 PM
Last Updated : 27 Feb 2021 04:59 PM

புதுச்சேரியில் மே மாதம் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்: மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நம்பிக்கை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்.

காரைக்கால்

புதுச்சேரியில் வரும் மே மாதம் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் இன்று (பிப். 27) காரைக்காலில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, அர்ஜூன் ராம் மேக்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகியுள்ளதைக் களத்தில் காணமுடிகிறது. மே மாதம் கண்டிப்பாக புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று முழு நம்பிக்கை உள்ளது.

காரைக்காலில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசவுள்ளார். காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசை மக்கள் விரும்பவில்லை. பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்" என்றார்.

முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் பேசுகையில், "பாஜக தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராக உள்ளது. புதுச்சேரி மாநில மக்கள், பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனச் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தெரிவிக்கின்றனர். நாராயணசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு எந்த அளவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்பதை மக்கள் சொல்லும்போது, நானும் அதில் ஒரு அங்கமாக இருந்துள்ளதை நினைக்கும்போது வேதனையளிக்கிறது. புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களும் சமமான வளர்ச்சி பெற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு" என்றார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் கூறுகையில், "50 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு, புதுச்சேரி மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. 5 ஆண்டுகள் அவர் ஒரு காங்கிரஸ் தலைவர் போலத்தான் நடந்து கொண்டார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து கட்சியின் தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். மக்களின் விருப்பம் எதுவோ அதற்கான குரலை புதுச்சேரி பாஜக எழுப்பும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x