Published : 27 Feb 2021 03:57 PM
Last Updated : 27 Feb 2021 03:57 PM
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. எனவே, அதிமுகவை கருவியாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல்நிதியளிப்பு மற்றும் பிரச்சார துவக்க மாநாடு இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் காமராஜ், பாலபாரதி, பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் சார்பில் 10 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்திடம் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரகாஷ் காரத் பேசியதாவது:
மத்திய அரசு ஆர்எஸ்எஸ்., கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவை ஒரே கட்சி ஆட்சி செய்யவேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. இந்தியாவின் உண்மையான குடியரசை மாற்ற நினைக்கிறது பாரதிய ஜனதா அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்துள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் பாரதிய ஜனதா உள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்துக்கள் மீது தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது மத்திய அரசு. மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்பட்டுவருகிறது. ஏழை, எளிய, சாமானிய மக்களை கண்டுகொள்வதில்லை. பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது பின்னர் அதை மூடிவிடுவது என செயல்பட்டுவருகிறது.
வேளாண் சட்டங்களை ஆதரித்து அதிமுக அரசு வாக்களித்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேராளவில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் அதானி, அம்பானி ஆகியே பெரும்முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. இதை எதிர்த்து தொழிலாளர்களுக்காக போராடும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும்.
பாரதிய ஜனதா அரசு இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட்களுக்கான அரசாக உள்ளது. மக்களின் அனைத்து உரிமைகளையும் போராடிப் பெற்றுத்தரும் கட்சியாக இடதுசாரி கட்சி உள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. எனவே அதிமுகவைக் கருவியாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
நமக்கும் அதிமுகவிற்கும் நேரடி போட்டி கிடையாது. பாரதிய ஜனதா கட்சியுடன் தான் நேரடி போட்டி. அதிமுகவின் பின்னால் நின்று பாரதிய ஜனதா தேர்தலை சந்திக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் அடிமை அரசாக அதிமுக செயல்படுகிறது.
அதிமுக சுயமாக அரசு நடத்தவில்லை. திரைக்கு பின்னால் இருந்து பா.ஜ., இயக்கிவருகிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT