Published : 27 Feb 2021 02:35 PM
Last Updated : 27 Feb 2021 02:35 PM
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வேட்பாளர் தேர்வில் சிக்கல் இருப்பதாலேயே கட்சித் தாவல், ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்வுகள் நடக்கின்றனவா என வழக்கறிஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி நீண்ட சுவாரஸ்யமான விளக்கமளித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
அப்போது வழக்கறிஞர் ஒருவர், புதுச்சேரியில் அண்மையில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததை முன்னிலைப்படுத்தி கேள்வி ஒன்றை முன்வைத்தார். அப்போது அவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் இருக்கிறதா? சரியான வேட்பாளரைத் தேர்வு செய்யாததன் காரணத்தாலேயே அவர்கள் பின்நாளில் பாஜகவிடம் விலை போகின்றனரா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "வேட்பாளர் தேர்வில் சறுக்குவது என்பது ஒரு சிறிய பிரச்சினையே. கோவாவில், மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை நான் நன்றாக அறிவேன். எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க் அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதையும் நான் நன்றாக அறிவேன். அது பெருந்தொகை.
அதனாலேயே மக்கள் அளித்த வாய்ப்பை நம்மிடமிருந்து பறிக்கிறது. புதுச்சேரியிலும் அதுதான் நடந்திருக்கிறது.
ஒருபுறம் பாஜக கோடிகளில் புரளுகிறது. மறுபுறம் இங்கு பல கட்சிகள் நிதி திரட்டக்கூட முடியாமல் தவிக்கிறது.
என்னிடமே நிறைய தொழிலதிபர்கள் பேசும்போது வெளிப்படையாக பாஜக நெருக்கடி பற்றிப் பேசியுள்ளனர். அவர்கள் என்னிடம், உங்களின் கொள்கைகளை நாங்கள் மதிக்கிறோம். உங்களை ஆதரிக்க விரும்புகிறோம். ஆனால், உங்களுக்கு நிதியுதவி செய்வது தெரிந்தாலே எங்களின் தொழில் முடங்கிவிடும் என்று அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பாஜக, அரசியல் களத்தில் அத்துமீறி அதிகாரம், பணபலத்தைப் பயன்படுத்தி மக்கள் தீர்ப்பை மாற்றுகிறது. ஊடகத்தில் ஊடுருவுகிறது, நீதித்துறையில் ஊடுருவுகிறது, அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி அளிக்கிறது. இதையெல்லாம் மீறி நாம் நாடாளுமன்றம் சென்றால் அங்கே நமக்கு பேசக்கூட அனுமதி மறுக்கிறது.
இதையெல்லாம் மாற்றும் சக்தி மக்களிடம் மட்டுமே உள்ளது. மக்கள் நாட்டில் நடப்பதை உணர வேண்டும். நாட்டின் சமநிலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதை உணர்ந்து மத்தியில் உள்ள ஆட்சியை அவர்கள் தூக்கி எறிய வேண்டும். அதுவரை சரியான வேட்பாளரை நிறுத்தினால் கூட பலன் இருக்காது.
கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை இன்னும் வலுவாக்க வேண்டும் என்று வழக்கறிஞராகிய நீங்கள் சொல்லும் அறிவுரையை ஏற்கிறேன். ஆனால், அதை செய்யக்கூட நாம் ஆட்சியில் இருக்க வேண்டும். நம்மிடம் நாடாளுமன்றம் என்ற அமைப்பு இருக்க வேண்டும்.
நாம் இப்போது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததுபோன்ற சூழலில் இருக்கிறோம். அதனாலேயே நான் சொல்கிறேன், மக்கள் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். நாம் தேர்தலில் பெறும் வெற்றி பெரும்பான்மை வெற்றியாக இருக்க வேண்டும். 15 சீட். 20 சீட் வித்தியாசம் என்றால் பாஜக நிச்சயமாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT