

சக்கர நாற்காலி குறித்த தன் கருத்தை கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் புரிந்துகொண்டிருப்பார் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (பிப். 27) கமல்ஹாசன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
உங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்திருக்கின்றனர். முதல்வர் வேட்பாளர் நீங்கள்தானா?
நாங்கள் பரிசீலித்து முடிவு செய்திருப்பது அதுதான். அது அவ்வாறாகவே இருக்கும்.
உறுதியாக நீங்கள்தான் முதல்வர் வேப்டாளரா? கூட்டணிக் கட்சிகளுக்காக சமரசம் இருக்குமா?
நாங்கள் சமரசத்திற்குப் பெயர்போனவர்கள் அல்ல. இருந்தாலும் நல்லவற்றுக்காக மட்டுமே சமரசம் செய்திருக்கிறோம்.
சக்கர நாற்காலி குறித்த உங்கள் கருத்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைக் குறிப்பதாகப் பலரும் கோபப்படுகின்றனரே?
கோபப்படுபவர்கள் வயதில், அறிவில், அனுபவத்தில் சிறியவர்களாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. கருணாநிதி இன்று உயிருடன் இருந்திருந்தால், நான் சொன்னதன் உள் அர்த்தத்தையும், அல்லது நான் சொன்னதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டிருப்பார். சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தபோது அதனைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்த கூட்டத்தில் நானும் ஒருவன். வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது. நான் என்னுடைய முதுமையைப் பற்றியும், நான் என்ன செய்வேன், செய்ய மாட்டேன் என்பது பற்றியும் மட்டுமே சொன்னேன். இதுவரை நாங்கள் நிகழ்த்திய அரசியல் அதற்குச் சான்று.
குடும்பப் பெண்களுக்கு ஊதியம் என்பதை எப்படிச் செயல்படுத்துவீர்கள்?
நாங்கள் இதனைக் கண்டுபிடித்தவர்கள் அல்ல. பெய்ஜிங்கில் இதனைப் பிரகடனம் செய்திருக்கின்றனர். தகுதிக்கேற்ப ஊதியம் கிடைக்கும். அரசே இதற்கு நிதி கொடுக்கும். ஆனால், இங்கு கடன் இருக்கிறது. கஷ்டம்தான். இருந்தாலும் செய்வோம். காலியான கஜானாக்களை நிரப்பியது நேர்மையாளர்கள்தான். சுரண்டியவர்கள்தான் ஊழல்வாதிகள். கஜானா நிரம்பும், கைச்செலவுக்குப் பணமிருக்கும் என்ற நம்பிக்கையில் நேர்மையாளர்கள் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறோம்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.