Published : 27 Feb 2021 12:46 PM
Last Updated : 27 Feb 2021 12:46 PM
தனக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று (பிப். 27) நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். விசாரணையின் போது, காலதாமதமாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சில் இருந்து குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் எடுத்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் இந்த வழக்கை நிரூபிக்கவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிபதிகளை அவமதிக்கும் வகையிலோ, பட்டியலின மக்களை புண்படுத்தும் வகையிலோ மனுதாரர் பேசவில்லை என்றும் வாதிடப்பட்டது.
ஆனால், ஆர்.எஸ்.பாரதியின் மொத்த பேச்சும் பட்டியலின மக்களுக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் உள்ளதாகவும், உயர் பதவிகளை வகிக்க பட்டியலின மக்களுக்கு தகுதியில்லை என்ற பொருள்படும்படி பேசியுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு மக்களை பிளவுப்படுத்தும் வகையிலும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதாகவும் புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பாரதியின் பேச்சை எடுத்துக் கொண்டால், அது மக்கள் மனதில் வெறுப்புணர்வை உருவாக்குவதாக அமைந்துவிடும் என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகிறதா, இல்லையா என்பதை, காவல்துறை சேகரித்த ஆதாரங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம் தான் எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி, தினந்தோறும் விசாரணை நடத்தி, தாமதமின்றி வழக்கை முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷம் கக்குவது வழக்கமாகி விட்டதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இது இளைய தலைமுறையினருக்கு நல்லதல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT