Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM
விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2,166கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, ரூ.153.56 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உள்துறை சார்பில் ரூ. 240.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1,137 காவலர் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 5 காவல்துறை கட்டிடங்கள், 3 தீயணைப்பு,மீட்புப் பணி நிலையங்கள், 6 சிறைத் துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
மேலும் ரூ.2.96 கோடியில், 7 காவல் ஆணையரகங்கள், 31 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களை தொடங்கி வைத்தார். காவல் துறைக்கு 70 நான்கு சக்கர வாகனங்கள், 109 இருசக்கர வாகனங்கள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு 800 மடிக்கணினிகளை வழங்கினார்.
மேலும், பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக திட்ட, வளர்ச்சித் துறை மற்றும் ஐ.நா. பெண்கள்அமைப்புடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குடிசைமாற்று வாரியம் சார்பில், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ.384.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,557 அடுக்குமாடி குடியிருப்புகள், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில்ரூ.8 கோடியில் 6 சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
9,613 பேருக்கு நியமன ஆணை
மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 9,613 பேருக்கு நியமன ஆணை வழங்கும் வகையில் 5 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ரூ.10.93 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், 2 பாலங்களை திறந்துவைத்தார். ரூ.109.75 கோடியில் கட்டப்பட உள்ள பால், மீன்வளத் துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கால்நடைத் துறை சார்பில், ரூ.1.21 கோடியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்கள், ஆவின் சார்பில் ரூ.95.15 கோடியில்அமைக்கப்பட உள்ள தொழிற்சாலைகளை திறந்து வைத்தார்.
தருமபுரி, மதுரை சட்டக் கல்லூரிக்காக ரூ.79.22 கோடியில் புதியகட்டிடங்களை திறந்து வைத்தமுதல்வர், மதுரை சட்டக் கல்லூரியில் ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள நிர்வாக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
உயர்கல்வித் துறை சார்பில் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்துடன், அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ரூ.15.80 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தார். கோபிசெட்டிபாளையத்தில் ரூ.8.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரியையும் திறந்து வைத்தார்.
திருச்சி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன அலகில் ரூ.1,100 கோடி மதிப்பில் மரக்கூழ்தயாரிக்கும் பிரிவை முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தையும் நாமக்கல் மருத்துவக் கல்லூரியில் ரூ.95 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
செய்தித் துறை
செய்தித் துறை சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைக்கப்பட உள்ள, கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய வீரத் தியாகிகள் நூற்றாண்டு நினைவுமணிமண்டபத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர்வழங்கினார். மூக்கையா தேவர், மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைகளையும் திறந்து வைத்தார். தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட 4 நிறுவனங்களுக்கு ஏற்பு ஆணைகளை வழங்கினார்.
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ரூ.3.90 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டமைப்புகள், தேனி, திருவண்ணாமலையில் ரூ.2.60 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகங்களையும் திறந்து வைத்தார்.
அறநிலையத் துறை சார்பில் ரூ.113.87 கோடியில் கட்டப்பட்டுள்ள கோயில் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
போக்குவரத்து துறை சார்பில் ரூ.1.16 கோடியில் அலுவலகங்களை திறந்து வைத்தார். சீர்காழியில் ரூ.3.72 கோடியில் கட்ட உள்ள வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் தேர்வுத்தளத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT