Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேர்தல் சிறப்பு குழுவுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ், நடைமேடை 4-ல் வந்து நின்றது. அதில் இருந்து சந்தேகத்துக்கிடமாக இறங்கிய 2 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களது பைகளை சோதனை செய்தனர். 2 பேரின் பைகளிலும் கட்டுக்கட்டாக தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஹைதர் (55) , யூசுப் அலி (40) என்பதும், நெல்லூரில் அவர்கள் வேலை செய்யும் கிளை நிறுவனத்தில் இருந்து, நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
உரிய ஆவணம் இல்லாததால், ரூ.20 லட்சம் பணத்தையும், 2 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT