Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
சமய நூல்களைக் கடந்து பேசப்படும் நூலாக திருக்குறள் இருக்கிறது என மயிலம் பொம்மபுர ஆதீனம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் பாரத் அறிவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்பர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், மூன்றாவது உலக திருக்குறள் மாநாடு தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இம்மாநாடு தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, பாரத் கல்விக் குழுமச் செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். மாநாட்டை மயிலம் பொம்மபுர ஆதீனம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் தொடங்கி வைத்துப் பேசியது:
பல சமயத் தலைப்புகளில் இறைவனைப் பற்றிப் பாடப்படுகின்ற நூல்கள் பல இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி எல்லோராலும் பேசப்படுவது திருக்குறள்தான். ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வாழ்க்கைக்கான நீதிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி திருக்குறள் என்பது எக்காலத்துக்கும், யாருக்கும் பொருத்தமுடையது. திருக்குறளிலுள்ள 1,330 பாடல்களும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.
இதுபோன்ற விழாக்களை நடத்துவதன் மூலம் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள் ஒதுக்கப்பட்டு, மனிதனை மனிதனாகப் பார்க்கும் நிலை ஏற்படும். சமயம், இனம் என எல்லாவற்றையும் தாண்டி அனைவராலும் பேசவும், வணங்கவும் வேண்டியவர் திருவள்ளுவர் என்றார்.
விழாவில், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா.குறிஞ்சிவேந்தன், தமிழ் வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குநர் கா.பொ.ராசேந்திரன், துபை தமிழ்த்தேன் தமிழ் அமைப்புச் செயலாளர் ரமணிராசன், திண்டிவனம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் துரை.ராசமாணிக்கம், விழுப்புரம் ஈ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் ஏ.சாமிக்கண்ணு, அம்மா தமிழ்ப்பீட நிறுவனர் ஆவடி குமார் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில், மாநாட்டு மலரும், ஒலி- ஒளி இசைப் பாடல் குறுந்தகடும் வெளியிடப்பட்டன. முன்னதாக, மாநாட்டுச் செயலாளர் உடையார்கோவில் குணா வரவேற்றார். முடிவில், முனைவர் ம.சின்னதுரை நன்றி கூறினார்.
விழாவுக்கு முன்னர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட திருவள்ளுவர் சிலை ஊர்வலத்தை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க தேசியத் தலைவர் கோ.பெரியண்ணன் தலைமையில், தமிழக நாட்டுப்புற அனைத்து ஒருங்கிணைந்த சங்க மாநிலத் தலைவர் சின்னப்பொண்ணு குமார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பாரத் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT