Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம்: நாங்குநேரி பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்

கோப்புப்படம்

தூத்துக்குடி

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகத்தில் ஏற்கெனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர்,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அவர் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் 2-வதுகட்டமாக ராகுல் காந்தி இன்று(பிப்.27) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சந்திரமோகன், இணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே பொதுமக்களிடையே ராகுல் காந்தி பேசுகிறார். அதன்பிறகு கடற்கரைச்சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதிக்கு சென்று உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து முக்காணி, ஆத்தூர், சாகுபுரம்,குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டுபேசுகிறார். பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளம் செல்லும் அவர் காமராஜர் சிலை அருகே உரையாற்றுகிறார்.

அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்றுபொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்புஏற்பாடு களும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x