Published : 26 Feb 2021 07:06 PM
Last Updated : 26 Feb 2021 07:06 PM
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நிதி ஒதுக்க முடியாது என்று தெரிந்தும் அவசர, அவசரமாக அறிவிப்புகளை பழனிசாமி வெளியிட்டது சுயநல நோக்கம் கொண்ட 'தேர்தல் ஸ்டண்ட்' என்பதை மக்கள் அறிவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 26) மாலை, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் - ஹை-வே ஹோட்டல் எதிரில், மதுராந்தகம் - கலைஞர் திடலில் நடைபெற்ற, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் அவர் பேசியதாவது:
"என் மீது நம்பிக்கை வைத்து மக்கள், மனுக்களைக் கொடுக்கிறார்கள். கருணாநிதியின் மகன் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவான் என்று பொதுமக்களும் நம்புகிறார்கள். பழனிசாமிக்கு இதைப் பார்த்தால் வயிறு எரிகிறது.
இரண்டு மாதத்தில் ஆட்சி மாறப் போகிறது என்பதால் ஆத்திரத்தில் உளருகிறார் பழனிசாமி. 'கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாது திமுக" என்று சொல்லி இருக்கிறார். அதற்கு உதாரணமாக, நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், கொடுக்கவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
இதை விட பொய் வேறு இருக்க முடியாது. தான் ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், அது சம்பந்தமான கோப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று வரவழைத்து பார்த்திருக்க வேண்டும். அப்படிப் பார்த்திருந்தால் இத்தகைய பொய்யைச் சொல்வதற்கு அவரது வாய் கூசி இருக்கும். அந்த அக்கறை இல்லாத பழனிசாமி, வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லி இருக்கிறார்.
2006-ம் ஆண்டு தேர்தலில் சில முக்கியமான வாக்குறுதிகளை தலைவர் கருணாநிதி கொடுத்தார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.7,000 கோடி கடன் ரத்து என்பது முதலாவது. பதவி ஏற்பு விழா மேடையிலேயே ரூ.7,000 கோடி கடனையும் ரத்து செய்தவர் தான் கருணாநிதி!
நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார். அந்த அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது.
1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை, 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சி தான் திமுக ஆட்சி. 17.9.2006 அன்று திருவாரூரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய தினம் 24 ஆயிரத்து 358 குடும்பங்களுக்கு நிலம் தரப்பட்டது. 17.12.2006 அன்று விழுப்புரத்தில் 26 ஆயிரத்து 749 பேருக்கும் 17.3.2007 அன்று திருவண்ணாமலையில் 20 ஆயிரத்து 648 பேருக்கும், 17.6.2007 அன்று நெல்லையில் 19 ஆயிரத்து 821 பேருக்கும், 29.12.2007 அன்று ஈரோட்டில் 21 ஆயிரத்து 487 பேருக்கும், 17.3.2008 அன்று 13 ஆயிரத்து 270 பேருக்கும் நிலம் வழங்கிய ஆட்சி தான் திமுக ஆட்சி.
இது மட்டுமல்ல, திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ அப்போதெல்லாம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளருக்கு நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 1967 முதல் 76 வரையிலான திமுக ஆட்சியில் 3 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு 7 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் நிலம் தரப்பட்டது.
1996 - 2001 காலக்கட்டத்தில் 52 ஆயிரத்து 792 பேருக்கு 35 ஆயிரத்து 696 ஏக்கர் நிலம் தரப்பட்டது. இது எதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் வாய்க்கு வந்ததைச் சொல்லி வருகிறார் பழனிசாமி.
2011 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ, 2016 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ, நிறைவேற்றாத ஆட்சி தான் இந்த அதிமுக ஆட்சி.
செய்யூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான முயற்சி திமுக ஆட்சிக் காலத்தில் 2010-ல் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த அதிமுக அரசின் மெத்தனப் போக்கினால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளுக்கு தராமல் இழுத்தடிப்பது ஏன்? அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல், எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல், கையகப்படுத்தி உள்ள நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்தில் அந்த நிலங்களை பதிவு செய்வதற்கு தடையின்மைச் சான்றும் விரைவில் வெளியிட வேண்டும், இல்லையென்றால் திமுக அரசு அதனைச் செய்யும்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு இருப்பதாக பத்திரிகைகளில் பழனிசாமி விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அதனை பிரதமரும் ஏற்றுக்கொண்டு பேசுகிறார். பழனிசாமி ஆட்சியில் பெண்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்பதற்கு பொள்ளாச்சி ஒன்று போதாதா?
அதில் சிக்கி இருக்கும் அதிமுகவினரைக் காப்பாற்றுவதற்காக பழனிசாமி எவ்வளவோ துடித்தார். ஆனால், இறுதியில் சிபிஐ, அதிமுகவினரைக் கைது செய்துவிட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். பழனிசாமி ஆட்சியில் சாதாரணப் பெண்களுக்கு மட்டுமல்ல போலீஸ் அதிகாரியாக இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை!
இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியும் சாதாரண அதிகாரி அல்ல. சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி என்ற பதவியில் இருப்பவர். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஒருவர் இருக்கிறார். அவருக்கு இணையாக சிறப்பு டிஜிபி என்று இவரை தேவையில்லாமல் நியமிக்கிறார்கள். அப்படி நியமிக்கப்பட்ட ராஜேஷ் தாஸ், தனக்கு முதல்வரின் ஆசி இருக்கிறது என்ற மமதையில் நடந்து வருகிறார்.
முதல்வர் கலந்து கொள்ளும் விழாவின் பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் தான் இத்தகைய பாலியல் முறைகேட்டை அவர் செய்துள்ளார். இது பற்றி மேலிடத்துக்கு புகார் சொல்வதற்காக வந்த அந்த பெண் எஸ்.பி-யை வழிமறித்து தடுத்துள்ளார் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பெண் எஸ்.பி-க்கே இந்தக் கதி என்றால் சாதாரணப் பெண்களின் நிலைமையைச் சொல்ல வேண்டியது இல்லை.
பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸும், எஸ்.பி-யை வழிமறித்து மிரட்டிய எஸ்.பி கண்ணனும் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படாததற்கு என்ன காரணம்?
பெண் எஸ்.பி காரின் சாவியைப் பிடுங்கியது மட்டுமில்லாமல், 'பாலியல் குற்றம் புரிந்த சிறப்பு டிஜிபி-யிடம் பேசவில்லை என்றால் இங்கிருந்து உங்கள் கார் செல்ல அனுமதிக்க முடியாது' என்று எஸ்.பி கண்ணனை மிரட்டியது மனித உரிமை மீறல் ஆகும்.
அதிமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு, காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்துகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தனது கட்சிக்காரர்களை காப்பாற்றிய முதல்வர், இப்போது இக்குற்றத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளையும் காப்பாறுவது கண்ணியமற்ற செயல்.
இதை எல்லாம் தெரியாத பிரதமர் மோடி, கோவையில் பேசும் போது திமுகவை குறை சொல்லி இருக்கிறார். அவரது கூட்டணி ஆளும் அதிமுக ஆட்சியில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இந்த நிலைமை என்பதை மோடி அறியாமல் போனாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறாரா?
இன்றைக்கு ஆட்சி முடியப் போகும் நிலையில் தினந்தோறும் காலையும் மாலையும் கல்வெட்டுகளைத் திறந்து வைக்கிறார் பழனிசாமி. இன்று காலையில் இரண்டு அறிவிப்புகளை பழனிசாமி செய்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் ரத்து, இது ஏற்கெனவே ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டதுதான். மகளிர் சுய உதவிக்குழு சார்பில் வாங்கிய கடன் ரத்து என்று சொல்லி இருக்கிறார். இதுவும் நான்கு நாட்களுக்கு முன்னால் நான் அறிவித்ததுதான்.
2019-ம் ஆண்டு நாடாளுன்றத் தேர்தலில் இருந்தே நான் சொல்லி வருகிறேன். அப்போதெல்லாம் இவற்றை எல்லாம் ரத்து செய்ய முடியாது என்று சட்டப்பேரவையிலேயே சொன்னவர் இந்த பழனிசாமி. சொல்லி விட்டு கட்டாயமாக வட்டி வசூலையும் செய்தவர் பழனிசாமி.
இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிற அதே நேரத்தில், மாலையில் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே இந்த அறிவிப்பை செய்கிறார் என்றால், அது தனது சுயநலத்துக்கானது; தேர்தல் ஸ்டண்ட் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
கடந்த ஒருமாத காலமாக பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் பழனிசாமி. நிதி ஒதுக்கினாரா? இல்லை! சென்னையிலும் கோவையிலும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா? இல்லை!
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால் இனிமேல் நிதி ஒதுக்கீடும் செய்ய முடியாது. நிதி ஒதுக்காமலே அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அரைமணிநேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அப்படியானால் பிரதமரும் முதல்வரும் சேர்ந்து மக்கள் தலையில் மிளகாய் அரைத்துள்ளார்கள் என்று அர்த்தம்!
மக்களுக்கு இது தெரியாது என்று மோடியும் பழனிசாமியும் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்! ஏமாற்ற நினைக்கும் இவர்களை மக்கள் தேர்தலின் மூலமாக ஏமாற்றுவார்கள்!
ஆட்சி முடியப்போகும் நேரத்தில் இப்படி திடீர், திடீரென அறிவிக்கிறாரே, பழனிசாமி என்ன மந்திரவாதியா என்று கேட்டேன். இதற்கு பழனிசாமி பதில் சொல்லி இருக்கிறார். 'நான் மந்திரவாதி இல்லை, செயல்வாதி' என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. அவர் என்ன செயல் செய்தார் என்பதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது அது எனக்குத் தெரியாது, டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்ற பொய்வாதி அவர்!
நீட் தேர்வில் விலக்கு கேட்டு அனுப்பிய மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை மறைத்து ஏமாற்றிய ஏமாற்றுவாதி அவர்!
உங்கள் உறவினர்களுக்கு மட்டும் எப்படி டெண்டர் தரலாம் என்று கேட்டபோது உறவினர்கள் டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது என்று நடித்த ஊழல்வாதி அவர்!
யார் மீது தான் ஊழல் புகார் இல்லை என்று சொன்ன லஞ்சவாதி அவர்!
ஸ்டாலின் சொல்லும் திட்டங்களை எல்லாம் அமல்படுத்த பணமில்லை என்று கைவிரித்த பசப்புவாதி அவர்!
மத்திய அரசிடம் உரிமைகளைப் பெற முடியாத அடிமைவாதி அவர்!
தன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கும் ஆணவவாதி அவர்!
டெல்லியில் போராடுகிற விவசாயிகளை தரகர்கள் என்ற போலி விவசாயி அவர்!
கடன் வாங்குவது மட்டுமே நிர்வாகம் என்று நினைக்கும் கடன்வாதி அவர்!
டெண்டர் விடுவது மட்டுமே முதல்வர் வேலை என்று நினைக்கும் டெண்டர்வாதி அவர்!
மொத்தத்தில் அவர் சுயநலவாதி!
இந்த சுயநலக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT