Published : 26 Feb 2021 05:23 PM
Last Updated : 26 Feb 2021 05:23 PM

ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி

தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை 5 ஆண்டுகளை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது தமிழகத்தில் மே 24-ம் தேதியுடன் ஆட்சி முடிவடைகிறது.

அதேபோன்று புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் வெளியேறியதால் பெரும்பான்மை இழந்தது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மற்ற 3 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்புடன் சேர்த்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று தேர்தல் நடக்கிறது. மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தேர்தல் குறித்த அறிவிப்பு வருமாறு:

வேட்பு மனு தாக்கல் தேதி: மார்ச் 10

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20

வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22

வாக்குப்பதிவு: ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை: மே 2

தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே உடன் இருக்கலாம் , வேட்புமனுவை இதுவரை நேரில் மட்டுமே தாக்கல் செய்து வந்த நிலையில் ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம் என முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுனில் அரோரா அறிவித்தார்.

தமிழத்தின் சிறப்பு தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இதனிடையே, தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும். தற்போது துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் வாக்களர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். கரோனா நோய் வராமல் தடுக்கும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்க சமூக இடைவெளி நிச்சயம் கடைப்பிடிக்கப்படும்.

1950 என்ற எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்கள் 24 மணி நேரம் அளிக்கலாம். அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x