Published : 26 Feb 2021 04:44 PM
Last Updated : 26 Feb 2021 04:44 PM
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 7 பேர் கொண்ட மத்தியக் குழு விபத்து நடந்த பட்டாசு ஆலையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வந்த 14 பேர் அடுத்தடுத்து உயிரிந்தனர். அதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
அதையடுத்து, இந்த வெடி விபத்து குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.
இக்குழுவினர் விபத்து நடந்த பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆலை உரிமையாளர் ஆகியோரும் தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கண்ணன் தலைமையில், நாக்பூர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுட்டுத்துறை அதிகாரி குல்கர்னி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அலுவலர் கருப்பையா, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வரலட்சுமி, தொழிலாக பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார், சென்னை ஐஐடி வேதியியல் பொறியியல்துறை பேராசிரியர் பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன், மாநில பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினரும் மாவட்ட வருவாய் அலுவலருமான மங்களராசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழு அச்சங்குளம் கிராமத்தில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
அப்போது, வெடி விபத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்கள், பயன்படுத்தப்பட்ட வெடி மருந்துகள், பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஆலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள், வெடி மருந்துகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வெடி விபத்தின் வீரியம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்துக்கான காரணங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான மத்திய குழுவினர் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினரின் ஆய்வு அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT