Published : 26 Feb 2021 04:17 PM
Last Updated : 26 Feb 2021 04:17 PM
நாங்கள் ஒரு திட்டத்தை அறிவிக்க முடிவெடுத்துப் பேசுவதைத் தெரிந்துகொண்டு அதைத் தனது திட்டமாக அறிவித்து எங்கள் மீது பழியும் போடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தின் இடையே இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
“தமிழக அரசு மக்களின் கோரிக்கையை இயன்ற அளவு நிறைவேற்றி வருகிறது. விவசாய சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 12,110 கோடி ரூபாய் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர்க் கடன்களை ரத்து செய்துள்ளோம். பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மும்முனை மின்சாரம் அளிக்கப்படும்.
ஏழை எளிய மக்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கூட்டுறவு சங்க, கூட்டுறவு வங்கிகளில் 6 சவரனுக்குக் குறைவான தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளேன். அதேபோன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தான் சொல்லித்தான் கடன்களை அரசு ரத்து செய்வதாக கூட்டங்களில் பொய்யைக் கூறி வருகிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அவர்கள் ஆட்சியில் இல்லை என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் அதைச் சிந்தித்து கணக்கிட்டுப் பிறகுதான் அதை அறிவிப்பாக வெளியிட முடியும்.
அந்த வகையில் எங்களுடைய அரசு அதைக் கணக்கிடும்போதே அதைத் தெரிந்துகொண்டு, அதைப் பத்திரிகைகள் வாயிலாக, ஊடகத்தின் வாயிலாக நான் அறிவித்ததைத்தான் முதல்வர் அறிவிக்கிறார் என ஒரு தவறான பிரச்சாரத்தைப் பரப்பி வருகிறார். எங்களைப் பொறுத்தவரையில் எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்கிற அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
பல்வேறு கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளீர்கள். ஏற்கெனவே 5.70 லட்சம் கோடி கடன் இருக்கும்போது இதையும் எப்படிச் சமாளிப்பீர்கள்?
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கித்தான் செய்கின்றன. கையில் நிதியை வைத்துக்கொண்டு எந்த திட்டத்தையும் அறிவிப்பதில்லை. மக்களுடைய பிரச்சினைகளை அறியும்போது மக்கள்தான் முக்கியம் என்பதால் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அறிவித்துள்ளோம்.
மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அவர்கள் திட்டத்தை அறிவிக்கவில்லையா? இந்தியாவில் கடன் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக திட்டத்தை அறிவிக்காமல் இருந்தார்களா? அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் கடன் வாங்காத மாநிலம் கிடையாது. வளர்ச்சித் திட்டங்களுக்காகத்தான் வாங்குகிறோம்.
5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு பெரும்பாலும் கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்றியதால் ஜிடிபியில் உயர்ந்திருக்கிறோம். ஆகவே, இந்தக் கடன் எல்லாம் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி. அதேபோன்று ஸ்டாலின் சொல்கிறார், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரு லட்சம் கோடி கடன் இருந்தது என்று. அதை அவரே ஒப்புக்கொள்கிறார்.
அன்றைக்கு இருக்கும் விலைவாசி என்ன, இன்றைக்கு இருக்கும் விலைவாசி என்ன? இன்றைய சூழ்நிலையில் அதற்கு ஏற்றாற்போல செயல்படத்தான் வேண்டியுள்ளது. திமுக அரசே உலக வங்கியில் கடன் வாங்கியது. நாளுக்கு நாள் விலைவாசி ஏறுகிறது. அதற்கு ஏற்றாற்போல் கூடுதலாகச் செலவும் கூடுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இதை அறிவிக்கிறீர்களா?
தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேர்தலில் அறிக்கைதான் வெளியிடுவார்கள். ஸ்டாலின் என்ன சொல்கிறார்? பழனிசாமி அரசு அறிவிக்கத்தான் செய்யும், செய்யாது என்பார். எந்த திட்டத்தை அறிவித்தாலும் நிறைவேற்றியதே கிடையாது என்கிறார். அதற்காகத்தான், எங்கள் அரசு அறிவித்ததை நிறைவேற்றிக் காட்டத்தான் இதைச் செய்கிறோம்.
விவசாயக் கடன் தள்ளுபடி 5,000 கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே?
இது நபார்டு வங்கியுடன் சம்பந்தப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு சிறிது சிறிதாகக் கொடுப்போம்.
40 ஆயிரம் கோடி அவசர டெண்டர் போடப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே?
எங்கள் டெண்டர் இ-டெண்டர். அவர்களுடையது பாக்ஸ் டெண்டர். எங்களுடைய டெண்டர் வெளிப்படையானது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அதேபோன்று 40 ஆயிரம் கோடி என்பது மொத்த டெண்டர் தொகை. அது திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் ஒதுக்கப்படாது. மொத்தத் தொகையை வைத்து 40 ஆயிரம் கோடி என்று சொல்கிறார். பெரும்பாலான திட்டங்களை உலக வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டுதான் வெளியிட முடியும்.
ஆளுநரிடம் என்மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஒரு டெண்டர் ரத்து செய்யப்பட்டு தற்போதுதான் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதியும் ஒதுக்கவில்லை, வேலையும் நடக்கவில்லை. வேலையே நடக்காத ஒன்றில் ஊழல் நடந்ததாக அபாண்டமாகப் பொய் சொல்கிறார்.
4 ஆண்டு காலத்தில் பெரிய சாதனை என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்போது எவ்வளவு அராஜகம் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதையெல்லாம் முறியடித்துத்தான் முதல்வராக இருக்கிறேன். அதன் பின்னர் கட்சியை உடைக்கப் பார்த்தார்கள். அதன் பின்னர் எங்கள் கட்சியின் குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் திமுக தூண்டுதலின்பேரில் வெளியில் சென்றார்கள்.
சாதாரண விவசாயிகள் குடும்பத்தில் பிறந்த நான் நான்காண்டு காலம் முதல்வராகத் தொடர்ந்து முடித்துள்ளதற்குக் காரணம் சிறப்பான ஆட்சிதான். வறட்சி, புயல், கரோனா உள்ளிட்டவற்றைச் சமாளித்தது இந்த ஆட்சி.
பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரே?
அது விசாரணையில் உள்ளது. விசாரணை கமிஷன் அறிக்கை வந்தபின் தான் உண்மை என்னவென்று வெளிவரும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT