Published : 26 Feb 2021 02:52 PM
Last Updated : 26 Feb 2021 02:52 PM
தா.பாண்டியனின் வாழ்க்கையும், அவருடைய அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 26) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"மூத்த அரசியல் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
தா.பாண்டியன் பள்ளிப் பருவத்திலேயே சமூக, அரசியல் மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்டவர். கல்லூரியில் மாணவராக இருக்கும்போதே, தன்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுமையாக ஈடுபத்திக் கொண்டு, மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பேராசிரியர், வழக்கறிஞர், அரசியல்வாதி, இலக்கியவாதி, தொழிற்சங்கவாதி, பேச்சாளர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டு, நன்முத்திரை பதித்தவர் என்ற பெருமைக்குரியவர். அழகுத் தமிழில் நேர்த்தியான உச்சரிப்பில், தன்னுடைய கருத்துகளை ஆளுமையுடன் வெளிப்படுத்துவதிலும், விவாதக் களத்தில் மக்களை ஈர்த்ததோடு, மாற்றாரையும் செவிமடுக்கச் செய்து, தான் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெருமை சேர்த்தவர். தமிழக அரசியலில் தனி முத்திரை பதித்தவர்.
தா.பாண்டியன் பாரதியாரை பொதுவுடைமைக் கவிஞராக அடையாளம் காட்டியதில் தனி முத்திரை பதித்தவர். இவர் நாடாளுமன்றத்தில் தனது வாதங்களைத் திறம்பட எடுத்து வைத்தவர் என்ற சிறப்புக்குரியவர்.
தா.பாண்டியன கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாகப் பழகும் தன்மையுடையவர். தா.பாண்டியனின் வாழ்க்கையும், அவருடைய அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
தா.பாண்டியனின் மறைவு தமிழ்நாட்டுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT