Published : 26 Feb 2021 01:58 PM
Last Updated : 26 Feb 2021 01:58 PM

தா.பாண்டியன் மறைவு; ஈடு செய்ய முடியாத இழப்பு: தமிழக ஆளுநர் இரங்கல்

தா.பாண்டியன் - பன்வாரிலால் புரோஹித்: கோப்புப்படம்

சென்னை

தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (பிப். 26) காலை காலமானார்.

அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

"நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தா.பாண்டியனின் மறைவு செய்தியை அறிந்து நான் மிகுந்த துயருற்றேன்.

காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக தன் பணி வாழ்வை தொடங்கியவர் தா.பாண்டியன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில், வடசென்னை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 6 ஆண்டு காலத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பு வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் 'ஜனசக்தி' என்ற தினசரி நாளிதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார். பல தசாப்தங்களாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் மறக்க முடியாததாகவே இருக்கும்.

அவருடைய மறைவு, தமிழக மக்களுக்கும் குறிப்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்".

இவ்வாறு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x