Published : 26 Feb 2021 12:16 PM
Last Updated : 26 Feb 2021 12:16 PM
தா.பா. மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். தம் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்ட தோழர் தா.பா.வின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தி:
''தன் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு வந்த தோழர் தா.பாண்டியன் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தோழர் தா.பா, தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில், தன்னிகரற்ற சொற்பொழிவாளர்; ஆற்றொழுக்குப் போல, தங்கு தடையின்றி, தமது கருத்துகளை எடுத்துரைப்பவர், மிகச்சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி. எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதி இருக்கின்றார். தோழர் ஜீவாவின் பேரன்பைப் பெற்றவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றினார். பொதுவுடைமைக் கட்சி நடத்திய அத்தனை போராட்டக் களங்களிலும் பங்கேற்றவர். தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளராகப் பணிபுரிந்தார்.
பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதற்கு முன்பு, அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். வழக்கறிஞர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்துரைத்தார். அரிய கருத்துரைகளை நிகழ்த்தினார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கடைசியாக, கடந்த பிப்ரவரி 18ஆம் நாள், மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாட்டில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து கேட்டேன்.
என் கையும் காலும்தான் சரியாக இல்லை, ஆனால், என் மண்டை சரியாகத்தான் இருக்கின்றது, பொதுவுடைமைக் கொள்கை வென்றே தீரும், அதற்காக என் மூச்சு இருக்கின்றவரையிலும் முழங்குவேன் என்று அவர் சொன்னபோது, மெய்சிலிர்த்துப் போனேன். அவரது உரை, என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
அவரது மறைவு, பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வேதனையில் தவிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், கட்சிகளின் எல்லைகளைக் கடந்து அவரை நேசிப்பவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மதிமுக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்''.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT