Published : 26 Feb 2021 12:03 PM
Last Updated : 26 Feb 2021 12:03 PM

தா.பாண்டியன் மறைவு; விஜயகாந்த், எல்.முருகன், தினகரன், வேல்முருகன் இரங்கல்

தா.பாண்டியன்: கோப்புப்படம்

சென்னை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த், தலைவர், தேமுதிக:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானா‌ர் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

எல்.முருகன், தலைவர், தமிழக பாஜக:

65 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் உழைத்திட்ட தலைவர் தா.பாண்டியன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இலக்கிய மன்றங்களை அலங்கரித்தவர் எனப் பலதுறை வித்தகராக விளங்கியவர்.

தா.பாண்டியன் மறைவு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக:

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தா.பாண்டியன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதைத் துணிச்சலாகப் பேசியும், செயல்பட்டும் வந்தவர்.

கட்சிகளைத் தாண்டி ஜெயலலிதா மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடு நட்புடனும் அன்புடனும் பழகியவர்.

தா.பாண்டியனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி:

பொதுவுடைமை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய மாபெரும் போராளி தா.பாண்டியனின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு தா.பாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன்.

தமிழக அரசியலில் மறுக்க முடியாத, மறக்க முடியாத மாபெரும் தலைவராக விளங்கியவர் தா.பாண்டியன். தனது நீண்ட நெடிய வாழ்நாள் பயணத்தில் தமிழக மக்களுக்குச் சேவையாற்றுவதிலேயே கழித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து சமரசமின்றி சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய மாபெரும் போராளி தா.பாண்டியன்.

சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, எளிய மனிதர் எனப் பன்முகத்தோடு திகழ்ந்த தா.பாண்டியன் அவர்கள் சாமானியர்களின் எளிய தலைவராக விளங்கினார். அதுமட்டுமின்றி எனக்கு ஒரு நல்ல அரசியல் வழிகாட்டியாகவும் விளங்கினார் தா.பா.

இச்சூழலில் பொதுவுடமையின் தூணாக விளங்கிய தா.பாண்டியனின் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது. அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும், அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. தா.பாண்டியனின் ஆழமான கருத்துகள், அறிவுசார்ந்த பேச்சுகள் இனிமேல் கேட்காது என்பதை நினைக்கும்போது என் மனது வலிக்கிறது.

அவரது மறைவுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, தா.பாண்டியனின் குடும்பத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்கும் ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x