Published : 26 Feb 2021 11:20 AM
Last Updated : 26 Feb 2021 11:20 AM

தமிழக அரசியலில் 60 ஆண்டுகள் ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது: தா.பா. மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

சென்னை

இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மதப் பிளவுகளை விரிவுபடுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தைச் சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்குப் பேரிழப்பாகும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

''தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், மதிப்புமிக்க மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியனைக் காலம் பறித்துக் கொண்டது. பிப்.26 காலை 9.58 மணிக்கு சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழவெள்ளை மலைப்பட்டியில் 18.05.1932ல் தோழர் தா.பாண்டியன் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள். அவர்களது எட்டுக் குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்தனர்.

பத்து வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்பால், காவல் நிலையம் மீது கல்லெறிந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். 1948-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அடக்குமுறை காலத்தில் கைது செய்யப்பட்டவர். அதனால் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது அண்ணன் தா.செல்லப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அண்ணனிடமே மார்க்சியம் கற்றதோடு, பள்ளி, கல்லூரிகளில் பயின்று முதுகலைப் பட்டமும் பெற்றார். 1953-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். தான் படித்த அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளரானார். அங்கேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது மனைவி ஜாய்ஸ் பாண்டியனும் ஆசிரியர்தான். முதல் இரு பெண் குழந்தைகளும் காரைக்குடியில்தான் பிறந்தனர்.

1961-ல், பேராசான் ஜீவாவின் முன்முயற்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் முதலாவது பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக விரிவுரையாளர் வேலையிலிருந்து விலகி, சென்னை வந்தார். சட்டக் கல்லூரியில் மாணவரானார். பிறகு அவரது மனைவியும் குழந்தைகளோடு சென்னை வந்து, பள்ளி ஆசிரியை பணி தேடி அமர்ந்து, குடும்பத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1962-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1964-ல் கட்சி பிளவுபடுத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலைத்து நின்ற தா.பாண்டியன், தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக் குழு ஆகியவற்றுக்குப் படிப்படியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1989 - 90 மற்றும் 1991 - 1996 என ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவர். ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் செயல்பட்டார்.

1991-ல் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி படுகொலையுண்டபோது, மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகி நீண்ட காலம் மருத்துவமனையிலிருந்து உயிர் பிழைத்தார். அந்தக் குண்டுச் சிதறல்களை வாழ்நாள் முழுவதும் தாங்கியே வலம் வந்தார். திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பின்னர், கட்சியின் மாநிலச் செயலாளராக 2005-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு, 2015 வரை அப்பொறுப்பில் இருந்தார். தொடர்ந்து தேசியக் குழு உறுப்பினராக இறுதி மூச்சுவரை பணியாற்றினார்.

தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல் வளமும், நாவன்மையும் கொண்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் பரந்த வாசிப்பு கொண்டவர். இடையறாது படிப்பதும், படித்ததைச் சுவை குன்றாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைப்பதும் அவருக்கு இயல்பாகக் கைவந்தது.

பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்து வன்மை கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஜனசக்தியில் ஆயிரத்துக்கு, மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். ஜனசக்தியில் ‘சவுக்கடி’, ‘கடைசிப் பக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் தீப்பறக்கும் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் அதனால் தாக்குதலுக்கு உள்ளபவர்கள் கூட தேடிப்படிக்கும் அளவு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியவை. ஜனசக்தியின் ஆசிரியராக இறுதி மூச்சுவரை அவர் பணியாற்றியுள்ளார்.

கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியபோது, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ‘பாலன் இல்லத்’துக்கு சென்னை, தி.நகரில் எட்டு அடுக்குகள் கொண்ட கம்பீரமான கட்டிடத்தைப் பல பிரச்சினைகளுக்கு இடையே கட்டி எழுப்பியது அவரது மறக்க முடியாத வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும்.

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் குரூரமான தாக்குதலுக்கு ஆளானபோது பயனுள்ள எதிர்வினை ஆற்றியவர். தமிழகத்தில் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து காலத்தில் அவர் எடுத்த முயற்சியால், சிங்கள எதிர்ப்பு தமிழர் பாதுகாப்புச் செயல்பாடு மீண்டும் சூடு பிடித்தது.

தமிழகத்தில் பகுத்தறிவு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னலைப்படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. மதவெறி, வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என அண்மையில் மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூர்மையான எதிர்ப்பாளரான அவர், போருக்கு எதிரான, உலக மக்களிடையே ஒப்புறவுக்கான இயக்கங்களை நடத்தி தலைமை தாங்கியவர்.

இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மதப் பிளவுகளை விரிவுபடுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தைச் சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்குப் பேரிழப்பாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்துவிட்டது. தோழர் தா.பாண்டியன் திருப்பெயர் என்றென்றும் நிலைக்கட்டும். தோழர் தா.பாண்டியனுக்குக் கண்ணீர் அஞ்சலி, செவ்வணக்கம்”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x