Published : 26 Feb 2021 10:04 AM
Last Updated : 26 Feb 2021 10:04 AM
ரஜினி, சம்பந்தியாக இருந்தாலும், அவருடன் வர்த்தக ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. குடும்பத்தினர் பெயரைக் களங்கப்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயல்வதால் சமாதானம் செய்துகொள்ள விரும்பவில்லை என கஸ்தூரி ராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இயக்குனர் கஸ்தூரி ராஜா, தன்னிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், இந்தத் தொகையைத் தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தி ரஜினி தருவார் எனக் கடிதம் கொடுத்ததாகவும், ரஜினி பெயரைத் தவறாகப் பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டதால், வழக்கைத் தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கஸ்தூரி ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 லட்சம் ரூபாய் மட்டுமே போத்ராவிடம் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். கடன் பெறுவதற்காகக் கொடுத்த வெற்றுக் காகிதத்தில், பணத்தைத் தராவிட்டால் ரஜினி தருவார் என போத்ராவே எழுதிக் கொண்டதாகவும், காவல்துறை விசாரணையிலும், கீழமை நீதிமன்ற விசாரணையிலும் கூட போத்ரா இதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கஸ்தூரி ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
ரஜினி, சம்பந்தியாக இருந்தாலும், அவருடன் வர்த்தக ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லையெனவும், குடும்பத்தினர் பெயரைக் களங்கப்படுத்தி பணம் பறிக்க முயல்வதால் சமாதானம் செய்துகொள்ள விரும்பவில்லை எனவும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் எனவும் கஸ்தூரி ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
சினிமா துறையில் உள்ளவர்கள் மீது திட்டமிட்டுப் பொய்யான ஆதாரங்களை உருவாக்கி பணம் பறிப்பதையே போத்ரா நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதாகவும், ஆண்டுக்கு இதுமாதிரி குறைந்தது 150 பேரிடமாவது போத்ரா இவ்வாறு செய்வது வாடிக்கை எனவும் கஸ்தூரி ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
65 லட்ச ரூபாயைப் பணமாகக் கொடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய ககன் போத்ராவுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT