Published : 26 Feb 2021 09:36 AM
Last Updated : 26 Feb 2021 09:36 AM
“தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது” என ஜெனிவாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது இந்தியாவின் விருப்பம் என இந்தியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய இந்திரா மணி பாண்டே பேசியதாவது:
“இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மற்றும் அவரது உரையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் பக்கத்து நாடு என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விஷயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.
எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.
1. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு
2. சமத்துவம், நீதி, அமைதி, கவுரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் விருப்பங்களுக்கு உறுதியளித்தல்
ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடு உள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகப் பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம். எனவே, தமிழ்ச் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.
நல்லிணக்கச் செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய விருப்பங்களுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையைக் கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.
பசுமைத் தாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT