Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

புதுச்சேரி முன்னேற்றத்துக்கு அனைத்து உதவிகளும் செய்யத் தயார்; புதிய துறைமுகத்தால் சென்னையுடன் கடல்வழி பயணத் தொடர்பு: நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பெருமிதம்

புதுச்சேரியில் ஜிப்மர் வளாகத்தில் நடந்த அரசு விழாவில் ரூ.3 ஆயிரத்து 23 கோடி களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. உடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூம் ராம் மெக்வால், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். படம் செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய சிறிய துறைமுகம் அமைவதால் சென்னை உடன் கடல்வழி தொடர்பு ஏற்படும். சென்னை துறைமுக சுமை குறையும். கடற்கரை நகரங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்துசாத்தியத்தை இது திறந்து வைக்கும். புதுச்சேரி முன்னேற்றத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று புதுவையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானத்தில் புதுச்சேரிக்கு வந்தார். தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.

ரூ.3,023 கோடியில் நலத்திட்டம்

ரூ.3 ஆயிரத்து 23 கோடிகளுக்கான நலத் திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி பேசியதாவது:

புதுவையின் புனித தன்மை என்னை இந்தப் புண்ணிய பூமிக்கு மீண்டும் அழைத்து வந்துள்ளது.

புதுவை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேரிகட்டிடம் பழமை மாறாமல் அப்படியே மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடற்கரைக்குஅழகு சேர்க்கும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கொண்டு வந்து சேர்க்கும்.

நாட்டின் வளர்ச்சிக்கு உலகத்தர உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். இதற்காக 45 -ஏ தேசிய நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சட்டநாதபுரத்தில் இருந்து காரைக்கால் வழியாக நாகப்பட்டினத்துக்கு 56 கி.மீ சாலை அமையும். சாலை வசதியால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு சுலபமாக செல்லலாம். நாகூர் தர்ஹா, வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணம் எளிதாகும்.

வள்ளுவரின் வாக்கு

கிராமப்புற, கடலோர தொடர்பைமேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலனடைகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதுநமது கடமை. நல்ல சாலைகள்இதைத்தான் செய்கின்றன. இதனால் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

புதுவையில் தற்போது 400 மீட்டர் சிந்தடிக் தடகள ஓடுதளத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் இளைஞர்களின் திறமை வெளிக்கொண்டு வரப்படுகிறது. விளையாட்டு விடாமுயற்சியை விதைக்கிறது.

சுகாதாரத் துறையில் முதலீடுசெய்யும் நாடுகள்தான் வரும்காலத்தில் முன்னேறும். அத்தனை பேருக்கும் சுகாதாரமான வாழ்வு கிடைக்கும் முயற்சியாக ஜிப்மரில் ரூ.28கோடியில் ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ரத்த மாற்று சிகிச்சைக்கான ஆராய்ச்சி மையமாக இது திகழும். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு /மாடல்ல மற்றை யவை’ என திருவள்ளுவர் கூறியுள்ளார்.கல்விதான் விலை மதிப்புஇல்லாதது, மற்றவை நிலையற்றது. ஆரோக்கியத்தின் தரத்தை மேம்படுத்த தரமான மருத்துவப் பணியாளர்கள் தேவை. அதற்காகவே காரைக்காலில் ஜிப்மர் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

கடற்கரைதான் புதுவையின் உயிர்நாடி. மீன்பிடி தொழில், துறைமுகம் ஆகியவை கொண்ட நீலப் பொருளாதாரத்தில் பல வாய்ப்புகள் கொட்டியுள்ளன. சாகர் மாலா திட்டத்தின்கீழ் துறைமுகம் அமைப்பது மீனவர்களுக்கு பேருதவியாக இருக்கும். புதுச்சேரியில் புதிய சிறிய துறைமுகம் அமைவதால் சென்னை உடன் கடல்வழி தொடர்பை ஏற்படுத்தும். சென்னை துறைமுகச் சுமை குறையும்.

நேரடி பணப் பரிமாற்றம்

நேரடி பணப் பரிமாற்றத்தால் புதுச்சேரி மக்கள் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையின் முன்னேற்றத்துக்கு எனது அரசு அத்தனை உதவிகளையும் செய்யும். அதனை உத்தரவாதப்படுத்தவே நான் வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

‘புதுவையின் தலைமை பீடம் டெல்லியாக இருக்கக் கூடாது’

லாஸ்பேட்டையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு சேவை செய்வதில் கவனம் செய்யும் அரசுதான் புதுவைக்கு கிடைத்தது. புதுச்சேரி அரசின் தலைமைப் பீடம் என்பது மக்களாக இருக்க வேண்டுமே தவிர, டெல்லியில் அமர்ந்துள்ள சிறிய ஒரு குழுவாக அது இருக்கக் கூடாது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு புதுவையில் அமையும் அரசு, மக்கள் சக்தியால் உந்தப்பட்ட அரசாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x