Published : 25 Nov 2015 05:30 PM
Last Updated : 25 Nov 2015 05:30 PM
பக்கிள் ஓடையை திமுக ஆட்சியில் சீரமைத்ததால் தான் தூத்துக்குடி மாநகரம் தப்பியது என திமுக தெரிவித்துள்ளது. ஆனால், பக்கிள் ஓடையை திமுக ஆட்சியில் குறுகலாக அமைத்ததால் தான் இந்த அளவுக்கு காட்டாற்று வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக அதிமுக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் கடலுக்கு செல்வதற்காக பக்கிள் துரை என்ற ஆங்கிலேய அதிகாரியால் இந்த ஓடை அமைக்கப்பட்டது. இதனால் அவரது பெயரிலேயே இன்றளவும் இந்த ஓடை அழைக்கப்படுகிறது.
ரூ.32 கோடியில் சீரமைப்பு
காலப்போக்கில் பக்கிள் ஓடை சாக்கடை கால்வாயாக மாறியது. தூத்துக்குடியின் கூவம் என்றழைக்கப்படும் பக்கிள் ஓடையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு அகலம் சுருங்கியது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துவிடுகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் பெய்த காலம் தவறிய மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அப்போது பார்வையிட வந்த அப்போதைய உள்ளாட்சி அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கிள் ஓடையை சீரமைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பக்கிள் ஓடை திரேஸ்புரம் கடற்கரை முதல் 3-ம் மைல் வரை சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு சீரமைக்கப்பட்டது. ஆனால், அதற்கு மேற்கே உள்ள பகுதி சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பக்கிள் ஓடை குறித்த சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
திமுக பெருமிதம்
தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என். பெரியசாமி கூறும்போது, ‘முந்தைய திமுக ஆட்சியில் ரூ. 32 கோடியில் பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டதால் தான் தற்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தூத்துக்குடி மாநகரம் தப்பியுள்ளது.
திரேஸ்புரம் முதல் 3-ம் மைல் வரை பணிகள் முடிந்த நிலையில் எங்கள் ஆட்சி முடிந்துவிட்டது. அதற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சியில் மீதமுள்ள பகுதிகளை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பக்கிள் ஓடை முறையாக பராமரிக்கப்படாததால் குப்பைக் கூழங்கள் சேர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிமுக அரசு பக்கிள் ஓடை முழுவதையும் சீரமைத்து, முறையாக பராமரித்திருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக் கூட ஏற்பட்டிருக்காது’ என்றார் அவர்.
அதிமுக குற்றச்சாட்டு
அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறும்போது, ‘பக்கிள் ஓடை முன்பு 30 அடி முதல் 40 அடி அகலம் வரை இருந்தது. கடந்த 2001- 2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் பக்கிள் ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு வேறு இடங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், அதற்கு பிறகு வந்த திமுக ஆட்சியில் 40 அடியாக இருந்த பக்கிள் ஓடையை 20 அடியாக சுருக்கி சீரமைத்தனர். ஓடை குறுகியதால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கால்வாய் சீரமைப்பு என்றால் தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை இருக்க வேண்டும். ஆனால் பக்கிள் ஓடையில் தலைகீழாக, சேரும் இடமான திரேஸ்புரத்தில் இருந்து ஆரம்பித்து பணியை செய்துள்ளனர். பக்கிள் ஓடையை திமுக அரசு ஏதோ நோக்கத்துக்காக சீரமைத்துள்ளது. அதனை அகலப்படுத்தி மறுசீரமைப்பு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றார் அமைச்சர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT