Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM

எதிரிகளின் கனவை கலைக்கவே ‘செயல்வீரர் செயலி’ அறிமுகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

திருவண்ணாமலையில் திமுக செயல்வீரர் செயலியை காணொலி காட்சி வாயிலாக அறிமுகம் செய்து வைத்து பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். விழா மேடையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நிர்வாகிகள்.

திருவண்ணாமலை

திமுகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்புபவர்களின் பகல் கனவை கலைத்து தூங்க விடாமல் செய்வதற்காக ‘செயல்வீரர் செயலி’ தொடங்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொறியாளர் அணி சார்பில் ‘செயல்வீரர் செயலி’ அறிமுகம் விழா திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். காணொலி காட்சி மூலம் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “செயல்வீரர்கள் என்றால் யார்? திமுகவின் ஒவ்வொரு உடன்பிறப்பும் செயல்வீரர்தான். இந்த செயலியை திமுகவினர் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். எதற்காக இந்த செயலி? மானமுள்ள ஆயிரம் பேருடன் சண்டை போட முடியும். ஆனால், மானமற்ற ஒருவருடன் மல்லுக்கட்ட முடியாது என தந்தை பெரியார் சொல்வார்.

அதேபோல், உண்மைகளை பேசும் நபர்களை எதிர் கொள்ள முடியும். பொய்களை மூட்டைக்கட்டிக் கொண்டு அவிழ்த்துவிடுபவர்களை எதிர்கொள்வது சுலபமல்ல. இந்த தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிரான பொய்களை அவிழ்த்துவிட்டு, அவதூறுகளை பரப்பிவிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். அவர்களது பகல் கனவை கலைத்து, தூங்க விடாமல் செய்வதற்காகதான், இந்த புதிய செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.

திமுக ஆட்சியின் சாதனைகள், ஒவ்வொரு வீட்டுக்கும் பலனை கொடுத்து வருகிறது. 69 சதவீத இடஒதுக்கீடு மூலம் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெற்றனர். அதன்மூலம் வேலைகளை இளைஞர்கள் பெற்றுள்ளனர். அரசுப் பணியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பொறியாளர்களும் மருத்துவர்களும் உருவாகியுள் ளனர். அதற்கு காரணம், நுழைவுத் தேர்வை கருணாநிதி அரசு ரத்து செய்ததுதான்.

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வணிகர்களுக்கு ஒருமுனை வரி, தமிழகம் முழுவதும் தொழில் முதலீடுகள், ஐடி நிறுவனங்களை கொண்டு வந்தது, இந்தியாவில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்ப கொள்கை, ஏழைகளும் அடுக்குமாடியில் வசிப்பதற்காக குடிசை மாற்று வாரியம், மற்றும் தொகுப்பு வீடுகள், அனைத்து சமுதாயத் தினரும் ஒன்றாக வாழ சமத்துவபுரம் கொண்டு வந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி எதிரிகளின் பொய்களை தவிடு பொடியாக்கிடுவோம். கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதிய வைப்போம். கருணாநிதி வழியில் திமுக அரசு அமைக்க உறுதி ஏற்று, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். மக்களின் கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றுவோம்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x