Published : 25 Feb 2021 09:51 PM
Last Updated : 25 Feb 2021 09:51 PM
போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்ற முறை 58 வயதில் இருந்து 59 வயதாக மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோதே 60 வயதாக ஆக்கியிருக்க வேண்டும்.
தற்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் அதைக் கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான பலன்களை எதிர்பார்த்துத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் பழனிசாமி, இப்போதுதான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருக்கிறார்.
அதே நேரத்தில், படித்து கல்வித் தகுதி பெற்று, தமது எதிர்காலத்தை நினைத்து, மிகுந்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்து, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு எந்த வழியிலும் பறிபோகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதும் அவசியம்.
ஆனால், போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசுவதற்குக் கூட முதல்வர் பழனிசாமிக்கு மனமில்லை. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய பயன்களை அளிக்காமல் ஒருபுறம் நிந்தித்து - போராடும் அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி, வழிமறித்து, இரவோடு இரவாகக் கைது செய்து, அடக்கு முறைகளைக் கையாண்ட அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மை கொண்ட - முதல்வர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
இப்போதாவது போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வருவாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT