Published : 25 Feb 2021 08:16 PM
Last Updated : 25 Feb 2021 08:16 PM
புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியமைத்தது. ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக மோதல் வலுத்து பல நலத்திட்டங்கள் முடங்கின. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அரசியல் சூழல் மாறத்துவங்கியது.
இதற்கிடையில் ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அப்போதைய முதல்வர் நாராயணசாமி புகார் தந்தார்.
இச்சூழலில் புதுச்சேரி சூழல் தொடர்பாக பாஜகவும் புகார் தந்தது. அதைத்தொடர்ந்து கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசையை கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளும் காங்கிரஸ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து ஐந்து எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சியான திமுகவிலிருந்து ஒரு எம்எல்ஏ விலகினர்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் - திமுக கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், ஆட்சிக் கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின.
இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் கடந்த 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதனையடுத்து, புதுச்சேரியில் நான்கே முக்கால் ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் தமிழிசையை நாராயணசாமி சந்தித்தார். அங்கு முதல்வர், அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.
அவரும் அதனை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்த பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதையடுத்து சட்டப்பேரவையை முடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
நாராயணசாமியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான கோப்பு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சூழலில் இன்று புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அவர் புதுச்சேரியில் அரசு நிகழ்வு, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று புறப்பட்டார்.
இந்நிலையில் அமைச்சரவை அனுப்பிய கோப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தந்துள்ளார். இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவை இன்று இரவு வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT