Published : 25 Feb 2021 05:44 PM
Last Updated : 25 Feb 2021 05:44 PM
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு தேமுதிக பலமுறை கோரியும் அதிமுக தரப்பில் மவுனமே பதிலாக இருப்பதால், திமுக கூட்டணியையும் தேமுதிக மேலிடம் பரிசீலிப்பதாக அக்கட்சியின் மதுரை நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். எந்தத் தேதியில் தேர்தல் நடந்தாலும், சந்திக்கத் தயார் என்ற வகையில் தேர்தல் பிரச்சாரங்களில் பெரிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
அதிமுக, திமுக கூட்டணியில் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, வெற்றி வாய்ப்பு தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர்.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று அறிவாலயத்தில் பேச்சு நடந்துள்ளது. பேச்சுவார்த்தை மகிழ்ச்சியளித்ததாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.
இப்படியான சூழலில், அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தங்களது தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்கும் எண்ணத்தில் துரிதமாக பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் என அதிமுகவுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தாலும், அழைத்தபாடில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் கட்சியினர்.
இதனால், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, ‘‘ஒரு வேளை அதிமுக கூட்டணியில் இடம் பெறவில்லை என்றால் 234 தொகுதியிலும் போட்டியிட தயாராகுங்கள்’’ என, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில் திமுக பக்கமும் நகரலாமா என்ற திட்டத்திலும் தேமுதிக யோசித்துக்கொண்டிருக்கிறது எனக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கூட்டணி ஊசலாட்டம் ஒருபுறம் இருந்தாலும், பிற கட்சிகளைப் போன்று, சென்னையில் தேமுதிகவும் தொகுதியில் போட்டியிடும் விருப்ப மனுக்களை பெறத் தொடங்கியுள்ளது.
மதுரையில் மட்டும் இன்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்கள் கொடுத்துள்ளனர். மாநில நிர்வாகி முஜூபுர் ரகுமான் மதுரை மத்திய, வடக்கு தொகுதிக்கு மனு கொடுத்துள்ளார். தென்மாவட்ட அளவில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் மனு வழங்கியதாக அக்கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இப்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கும் தயராக இருக்கிறோம். ஸ்டாலினும் இதனை ஏற்க வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தலுக்குள் அதிமுக - அமமுக இணைந்துவிடும். அப்படி இல்லையெனில் இரட்டை இலையை முடக்கும் சூழல் ஏற்படலாம். கட்சிக்குள் பிளவு உருவாகும். அப்போது அதிமுகவில் பழைய நிலை தான். சேவல்- புறா கதை மாதிரி நடக்கும்.
முதல்வர் தரப்பு பிடிவாதமாக இருந்தாலும், அவர்களை சேர்க்க பாஜக முயற்சிக்கும்.
நாங்கள் அங்கிமிங்குமாக வாய்ப்பு தேடுகிறோம் என, ஊடகங்கள் கூறியதால் சீக்கிரமே பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவை அழைத்தோம். தேர்தல் பணி தொய்வின்றி நடத்த வேண்டும். திமுக எங்களை சேர்க்கத் தயாராக உள்ளனர். அவர்கள் வெற்றி கனிப்பில் உள்ளனர்.
இருப்பினும், கூட்டணியைப் பலப்படுத்த வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளில் மாவட்ட அளவில் பெரியளவில் நிர்வாகிகள் இருக்க வாய்ப்பு குறைவு. எங்களுக்கு மரியாதை முக்கியம். அதிமுக கூட்டணியில் 10, 15 தொகுதிகள் வாங்குவதைவிட, தனித்து நிற்பது மேலானது.
இந்த முறை தேமுதிக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்தக் கூட்டணியே வெற்றி பெறும். ஏனெனில், திமுக, அதிமுகவை போன்று கீழ் நிலையில் எங்களுக்கு நல்ல கட்டமைப்பு உள்ளது.
அமமுகவை சாதாரணமாக நினைக்க முடியாது. கடந்த எம்.பி தேர்தலில் விருதுநகரில் நாங்கள் தோற்கக் காரணம் அமமுக தான். பல தொகுதியில் அதிமுக, கூட்டணி வேட்பாளர்கள் தோல்விக்கும் அமமுகவே காரணமாக இருந்திருக்கிறது. அமமுகவை ஒன்றிணைக்கவில்லை என்றால், அதிமுக தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. அமமுகவை மேல்மட்ட நிர்வாகிகள் உணரவில்லை. ஆட்சி அதிகாரம், பணம், மத்திய அரசு ஒத்துழைப்பு உள்ளதாகக் கருதுகின்றனர். பாஜக அதிமுக, திமுகவை ஒழித்து வளர முயற்சிகிறது. தற்போது அதிமுகவை அழிக்கும் சூழல் அவர்களுக்குக் கை கூடலாம். பிறகு திமுகவுக்கு திட்டமிடுவர்.
நாங்கள் எந்தக் கூட்டணியில் இடம் பெற்றாலும், பரவலாக எல்லா மாவட்டத்திலும் குறிப்பிட்டத் தொகுதிகளில் போட்டியிடுவோம். அப்படியிருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT