

கரோனா புதிய அலை மீண்டும் பெரு உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (பிப். 25) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியாவில் சுமார் 7, 8 மாநிலங்களில் கரோனா புதிய அலை மீண்டும் பெரு உருவெடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டிலும் அது தொடங்கியுள்ளது என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய செய்தியாகும்.
இதற்கு முக்கியக் காரணம், முகக்கவசம் அணிவது முதல் மற்ற தனிநபர் இடைவெளி, அடிக்கடி சோப்பு போட்டுக் கை கழுவுதல், கிருமி நாசினியைத் தவறாமல் பயன்படுத்துதல் முதலியவற்றை 30 சதவிகிதம் பேரே கடைப்பிடிக்கிறார்கள். மீதியுள்ள 70 சதவிகிதம் பேர் மேற்கண்டவற்றைக் கடைப்பிடிக்காமல் சகஜமாக நடமாடுவதும், பழகுவதுமாக உள்ளனர்.
எனவே, ஒவ்வொருவரும் தவறாமல் கண்டிப்பாக மேற்கண்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமல் கடைப்பிடியுங்கள்!
நம் தோழர்கள்கூட முகக்கவசம் அணியாமலும், அணிவோர்கூட, அதை எடுத்து கழுத்துக்குக் கீழே 'ஸ்டைலாக' தொங்கவிட்டுக் கொண்டு பேசுவதும் விரும்பத்தகாதவையாகும்.
எனவே, முழு கவனத்துடன் இருந்து, உங்களையும் காப்பாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றும் கடமையை மறக்காமல், துறக்காமல் செய்யுங்கள் என்று கனிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.